கோலாலம்பூர், ஏப்ரல் 6 – கடந்த சனிக்கிழமை மாலை செமினியில் விபத்திற்குள்ளான ஹெலிகாப்டரின் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஹெலிகாப்டர் நடுவானில் வெடித்ததா? விபத்து நடக்க மோசமான வானிலை தான் காரணமா? பின்னணியில் ஏதாவது குற்றச்செயல் இருக்குமா? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
ஹெலிகாப்டர் நடுவானில் வெடித்துச் சிதறியதைப் பார்த்ததாக அப்பகுதியில் வசிக்கும் பாதுகாவலர் ஒருவர் தகவல் அளித்துள்ள நிலையில், ஊடகங்களில் வெளியான அந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் லியாவ் தியாங் லாய் தெரிவித்துள்ளார்.
மலேசிய விமானப் போக்குவரத்து இயக்குநர் தலைமையில் விபத்து குறித்து முழு விசாரணை நடத்த ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,இந்த விபத்து குறித்து யாரும் யூகச் செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் லியாவ் தியாங் லாய் குறிப்பிட்டுள்ளார்.
“விபத்துக்கு முன் ஹெலிகாப்டரிலிருந்து அபாய அழைப்பு ஏதும் வரவில்லை. உரிய பாதையில் தான் ஹெலிகாப்டர் பயணித்துள்ளது. அதன் விமானிக்கு உரிய உரிமமும் 13 ஆண்டு கால அனுபவமும் உள்ளது. ஹெலிகாப்டர் பறப்பதற்குரிய தரச் சான்றிதழும் பெறப்பட்டுள்ளது” என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் லியாவ் கூறியுள்ளார்.
இந்நிலையில், மோசமான வானிலையோ அல்லது தொழில்நுட்பக் கோளாறோ ஏற்பட்டிருந்தால் நிச்சயமாக கட்டுப்பாட்டு அறைக்கு ஹெலிகாப்டரிலிருந்து அபாய அழைப்புகள் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அப்படி ஒரு அழைப்புகள் வராத போது ஹெலிகாப்டர் எப்படி விபத்திற்குள்ளாகும்? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுத்துள்ளது.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ ஜமாலுடின் ஜார்ஜிஸ் உட்பட அறுவர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே, மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டி ஆய்விற்காக பிரிட்டன் அனுப்பப்படவுள்ளது. ஆய்வின் முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.