கோலாலம்பூர், ஏப்ரல் 9 – பிரதமரை வெறுக்கும்படி மக்களை தூண்டிவிடும் துன் மகாதீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு சார்பற்ற இயக்கமான ‘சாம்’ Members of Solidariti Anak Muda Malaysia (SAMM) வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் குவாந்தானிலும், கோலகுபுபாருவிலும் காவல்துறையில் இரு புகார்களை அளித்துள்ளனர். அதில் தேச சிந்தனை கருத்துக்களை வெளியிட்ட மகாதீர் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.
“பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை வெறுத்து ஒதுக்கும்படி பொதுமக்களை தூண்டும் விதமாக துன் மகாதீரின் அறிக்கை அமைந்துள்ளது,” என்கிறார் சாம் இயக்கத்தின் பகாங் மாநில ஒருங்கிணைப்பாளர் அமிருல் சியாஸ்வான்.
தேச நிந்தனை கருத்துக்கள் அடங்கிய அறிக்கைகளை வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் விசாரிக்கப்பட்டு, கைதாகி பின்னர் குற்றமும் சாட்டப்பட்டுள்ள நிலையில், அதே போன்ற கருத்துக்களை வெளியிட்ட மகாதீரை மட்டும் போலிசார் இன்னும் ஏன் நேரில் அழைத்து விசாரிக்கவில்லை என அமிருல் சியாஸ்வான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது வலைப்பக்கத்தில் 1 எம்டிபி மற்றும் அல்தான் துயா மரணம் குறித்து எழுதி உள்ளார் மகாதீர். இந்நிலையில் அவரது கருத்துக்கள் தேச நிந்தனைக்குரியவை அல்ல என ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறியுள்ளார்.
‘சாம்’ இயக்கத்தின் உலுசிலாங்கூர் ஒருங்கிணைப்பாளர் கைருல் அனாவ் கூறுகையில், “தனது கருத்துக்கள் குறித்து நேரில் விளக்கம் அளிக்குமாறு மகாதீரை காவல்துறை அழைத்திருக்க வேண்டும். இல்லையேல் பிரதமருக்கு எதிராக மகாதீரைப் போன்று சில விவகாரங்களை முன்வைத்து சுவரொட்டி அச்சிடும், பதாகைகள் வைக்கும் யாரையும் போலிசார் விசாரிக்கக் கூடாது,” என்றார்.