Home கலை உலகம் சிங்கப்பூரில் அனுமதியின்றி ஆஸ்கார் விருது படம் பதிவிறக்கம் – 500 பேரிடம் இழப்பீடு

சிங்கப்பூரில் அனுமதியின்றி ஆஸ்கார் விருது படம் பதிவிறக்கம் – 500 பேரிடம் இழப்பீடு

440
0
SHARE
Ad

சிங்கப்பூர், ஏப்ரல் 9 – சிங்கப்பூரில் ஆஸ்கார் விருது வென்ற ‘டல்லாஸ் பையர்ஸ் கிளப்’ (Dallas Buyers Club) எனும் ஹாலிவுட் படத்தை இணையம் வழியாக அனுமதியின்றி பதிவிறக்கம் செய்ததற்காக 500 பேரிடம், அப்பட நிறுவனம் இழப்பீடு கோரியுள்ளது. இதற்காக அந்நிறுவனம் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

Dallas Buyers C

கடந்த 2013-ம் ஆண்டு வெளியான டல்லாஸ் பையர்ஸ் கிளப் திரைப்படம், 1980-ம் ஆண்டு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது சிகிச்சைக்காக மேற்கொள்ளும் தேடல் பற்றிய கதையம்சத்தைக் கொண்டது. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் ஆஸ்கார் விருதுகளையும் தட்டிச் சென்றது.

#TamilSchoolmychoice

இப்படத்திற்கான பிரதி உரிமையை டல்லாஸ் பையர்ஸ் கிளப் மற்றும் வோல்டேஜ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் வைத்துள்ளன. இந்நிலையில், அந்த திரைப்படம் இணையம் வழியாக தொடர்ந்து பதிவிறக்கம் செய்யப்படுவதை தடுக்கவும், பதிவிறக்கம் செய்தவர்களிடம் நஷ்ட ஈடு கோரவும் அப்பட நிறுவனங்கள் முடிவு செய்தன. அதன்படி, சிங்கப்பூரில் அப்படத்தை பதிவிறக்கம்  செய்த 500 பேருக்கு சட்ட ரீதியிலான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதேபோல் ஆஸ்திரேலியாவில் 4700 பேருக்கும், அமெரிக்காவில் 1000 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்தவர்களின் ‘ஐபி முகவரி’ (IP Address) மூலமாக அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொதுவாக இணைய சேவை நிறுவனங்கள் தங்கள் ஐபிக்களை பயன்படுத்தும் பயனர்களின் விவரங்களை வெளியிடக் கூடாது. ஆனால், பட நிறுவனம் நீதிமன்றம் மூலம், சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுத்துள்ளதால், அவற்றின் உத்தரவிற்கு இணங்க இணைய சேவை நிறுவனங்கள் பயனர்களின் தகவல்களை வெளியிட்டன.

சிங்கப்பூரை பொறுத்தவரையில் சிங்டெல், ஸ்டார் ஹப் மற்றும் எம்1 நிறுவனங்கள் இணைய சேவை வழங்குவதால், அந்நிறுவனங்கள் மூலம் குறிப்பிட்ட அந்த பயனர்களின் விவரங்கள் அடையாளம் காணப்பட்டன.