Home உலகம் எவரெஸ்ட் வழியே நேபாளத்திற்கு ரயில் பாதை – சீனா புதிய திட்டம்!

எவரெஸ்ட் வழியே நேபாளத்திற்கு ரயில் பாதை – சீனா புதிய திட்டம்!

543
0
SHARE
Ad

rail2பெய்ஜிங், ஏப்ரல் 10 – சீன அரசாங்கம்  எவரெஸ்ட் சிகரத்தின் கீழ் சுரங்கப்பாதை மூலம் சீனா-நேபாளம் இடையே புதிய ரயில்பாதை அமைக்க தீவிரம் காட்டி வருகின்றது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், அது இந்தியாவிற்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

எதிர்வரும் 2020-ம் ஆண்டிற்குள் திபெத் வழியாக நேபாள நாட்டின் எல்லைப்பகுதி வரையில் எவரெஸ்ட் மலைப்பகுதியில் சுரங்கபாதை அமைத்து அதனுள் ரயில்பாதை அமைக்க சீனா முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சீனா-நேபாளம் இடையேயான வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேம்பாடு அடையும் என சீன அரசு தெரிவி்த்துள்ளது.

இது குறித்து சீன ரயில்வே துறையின் முக்கிய அதிகாரி வாங் மெங்சூ கூறுகையில், “குயிங்காய் மாகாணத்தில் இருந்து திபெத் தலைநகர் லசா வரையில் சுமார் 1,956 கி.மீ ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து விட்டன. நேபாளம் வரையில் நீட்டிக்கப்படும் ரயில் பாதை எவரெஸ்ட் மலையின் ஒரு பகுதியான கோமோலங்க்மா வழியாச் செல்லும். அதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டம் நிறைவேற்றப்படுவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும், அவைகள் களையப்பட்டு வருகின்றன” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

உலகின் மிகப்பெரிய பீடபூமியாக கருதப்பட்டு வரும் இப்பகுதிகளில் ரயில் பாதைகள் அமைப்பதன் மூலம் அவை உடையக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது, அதனையே சீன அரசாங்கமும் விரும்புகின்றது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள், சீனா அரசாங்கம், நேபாளத்திற்கு திடீர் நிதியுதவியாக சுமார் 128 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், நேபாள அரசு, இந்த ரயில் பாதை திட்டத்திற்கு எவ்வித இடையூறும் விதிக்கக் கூடாது என்பதற்காகத் தான் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிற்கு காத்திருக்கும் அபாயம்:

ஆசிய அளவில் சீனாவிற்கு பொருளாதார ரீதியாக கடும் போட்டி அளிக்கக் கூடிய நாடு இந்தியா தான். இதன் காரணமாக இந்தியாவை அச்சுறுத்த, அந்நாட்டைச் சுற்றியிருக்கும் அண்டை நாடுகளான பாகிஸ்தான், மாலத்தீவு, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளை நிதியுதவி அளித்து தன் வசம் வைத்துள்ள சீனா, நேபாளத்துடனான உறவையும் அதிகரிக்கவே இந்த புதிய ரயில்பாதை திட்டத்தை கையில் எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.