சிங்கப்பூர், ஏப்ரல் 10 – உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகள், வரலாற்று சிறப்பு மிக்க தொடர்கள், தூய தமிழில் அனல் பறக்கும் வசனங்கள் என அண்மைய காலமாக சிங்கப்பூர் மீடியாகார்ப் வசந்தம் தொலைக்காட்சி நாடகங்கள், உலக அளவில் தனி முத்திரை பதிக்கத் தொடங்கியுள்ளன.
பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் இது போன்ற தொலைக்காட்சி படங்களும், தொடர்களும், வசந்தம் தொலைக்காட்சியில் வெளியிடப்படுவதோடு, உடனுக்குடன் அதன் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் வெளியிடப்பட்டு வருவதால், சிங்கப்பூர் மக்கள் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்களும் அதை கண்டு ரசிக்கும் வாய்ப்பினைப் பெறுகின்றனர்.
தற்போது இந்த கூட்டணியுடன் இணைந்து சிங்கப்பூரின் அண்மைய நாடான மலேசியாவைச் சேர்ந்த திறமையான கலைஞர்களும் பணியாற்றத் தொடங்கியிருப்பதால், படைப்புகளின் தரம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்வதைக் காண முடிகின்றது.
அந்த வகையில், இந்த வாரம் திங்கட்கிழமை தொடங்கி வசந்தம் தொலைக்காட்சியில் தினமும் (வியாழன் வரை) இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பட்டு வரும் புதிய திகில் தொடரான ‘சத்ரியன்’ மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பினைப் பெற்று வருகின்றது.
ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியரின் வாழ்வில் நடக்கும் அசம்பாவிதங்கள், அதன் பின்னர் அவர் திரட்டும் வலிமையான சத்ரிய படை தான் இத்தொடரின் கதைக் கரு.
“ஒரு மனுஷனோட உடம்புல இருக்கிற ஒவ்வொரு சதுர அங்குலத்துல மட்டும் சுமார் முப்பத்தி ரெண்டு மில்லியன் கிருமிகள் உயிர் வாழுது. உடல் பூராவும் எண்ணிப்பார்த்தா, மனுஷன மனுஷனாவே மதிக்க முடியாது. அவன் வெறும் ஒரு நடமாடும் ராட்சச கிருமி. இந்த உலகத்த நாசமாக்க வந்த பூச்சி.இதுல எவன நல்லவன்னு சொல்லுறது. எவன கெட்டவன்னு சொல்லுறது? நல்லவன். கெட்டவன். இந்த ரெண்டு வார்த்தைக்கு நடுவுல இருக்கிறது ஒரே ஒரு விஷயம்தான்.ஒழுக்கம்.”
இப்படியாக முதல் பாகத்திலேயே பிரம்மிக்க வைக்கும் வசனங்களை கொண்ட ‘சத்ரியன்’ தொடரும் இரண்டு உண்மை சம்பவங்களை உதாரணமாகக் கொண்டு எழுதப்பட்டது தான் என்கிறார் அத்தொடரின் எழுத்தாளரும், தயாரிப்பு நிர்வாகிகளில் ஒருவருமான ஜெயா இராதாகிருஷ்ணன்.
இது குறித்து ஜெயா இராதாகிருஷ்ணனுடன் பேசிய தொலைப்பேசி வழி உரையாடல்கள் இதோ :-
செல்லியல்: ‘சத்ரியன்’ கதை உருவான விதம்?
ஜெயா இராதாகிருஷ்ணன்: சிங்கப்பூரில இருந்து வெளிநாட்டுக்கு மருத்துவம் படிக்கப் போன ஒரு மாணவன் மர்மமான முறையில் காணாம போய்ட்டார். இன்னைக்கு வரைக்கும் அவரை தேடிகிட்டு இருக்காங்க. அதே போல எனக்கு தெரிந்த ஆசிரியர் ஒருவர் ஒரு சம்பவத்தை சொன்னார். ஒரு முறை அவர் வீட்டுக்கு பக்கத்துல இருக்குற பார்க்குக்கு போன போது அங்க இருந்த சில கேங்ஸ்டர்ஸ் அவரை கிண்டல் பண்ணியிருக்காங்க. உடனே அவர், எங்கிட்ட படிச்ச மாணவர்கள் போலீஸ், வக்கீல்ன்னு இப்ப எங்கெல்லாம் வேலை செய்றாங்க தெரியுமா? நான் கூப்பிட்டேன்னா இப்பவே அவங்க எனக்கு உதவ வருவாங்கன்னு திரும்ப மிரட்டியிருக்காரு. உடனே அவங்க பயந்துகிட்டு அங்க இருந்து போய்ட்டாங்களாம். இதெல்லாம் நமக்கு கேட்குறதுக்கு சின்ன விசயமா தெரிஞ்சாலும் இதுல சிந்திக்க வேண்டிய விசயங்கள் நிறைய இருந்தது. அதான் இந்த இரண்டு சம்பவங்களையும் இணைச்சு ஒரு கதையா உருவாக்குனோம். இந்த நாடகம் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவுல ஷூட் பண்ணியிருக்கோம்.
செல்லியல்: அண்மைய காலங்களில் மலேசிய கலைஞர்கள் அதிகமாக சிங்கப்பூர் நாடகங்களில் பணியாற்றத் தொடங்கியிருக்கின்றார்களே?
ஜெயா இராதாகிருஷ்ணன்: உண்மை தான். மலேசியாவில் நிறைய திறமைவாய்ந்த கலைஞர்கள் இருக்குறாங்க. இப்ப சமீப காலங்களில் தான் மலேசிய கலைஞர்களுடன் பணியாற்றும் வாய்ப்புகள் அதிகமாகி வருகின்றன. பக்கத்து பக்கத்து நாட்டுல இருக்கோம் ஏன் நம்ம சேர்ந்து பணியாற்றக் கூடாது என்ற எண்ணம் வந்த போது தான் ‘ஜனனி D/O மாதவன்’ தொடர்ல மலேசிய நடிகை ஜாஸ்மின் அறிமுகமானாங்க. இப்ப ‘சத்ரியன்’ தொடர்ல ஒளிப்பதிவாளராக கார்த்திக் ஷாமலன், நடிகை ரெனித்தா என நிறைய மலேசியக் கலைஞர்கள் வேலை செஞ்சிருக்காங்க.
செல்லியல்: ‘சத்ரியன்’ -ல வசனங்கள் அவ்வளவு அற்புதமாக இருக்கின்றதே?
ஜெயா இராதாகிருஷ்ணன்: ரொம்ப நன்றி. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொன்றையும் பலமுறை யோசித்து எழுதினோம். இந்த தொடர்ல ஒரு சிறப்பு என்னென்னு பார்த்தீங்கன்னா. இதுல பாரதியார் பாடல்கள் தான் அதிகம் பயன்படுத்தியிருப்போம். இசையமைப்பாளர் சபீர் அற்புதமான இசையை கொடுத்திருக்காரு.
செல்லியல்: சிங்கப்பூர் படைப்புகளைப் பொறுத்தவரையில் சில கட்டுப்பாடுகளோடு தான் நீங்கள் பயணிக்க வேண்டி வரும் ? எப்படி அதை சமாளித்து ஒரு படைப்பை உருவாக்குகிறீர்கள்?
ஜெயா இராதாகிருஷ்ணன்: உண்மை தான். சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் ஒரு படைப்பில் தவறான வார்த்தைகளையோ அல்லது ஆபாசமான காட்சிகளையோ காட்ட முடியாது. அதை சென்சார் செய்து தான் ஒரு படைப்பையே உருவாக்க முடியும். அப்படி இருக்கும் போது அந்த உணர்வை சரியா மக்களிடம் கொண்டு சேர்க்க கடுமையான உழைப்பு தேவைப்படுது. ‘சத்ரியன்’ கதை உருவாக்கத்திலும் அதை தான் நாங்கள் செய்திருக்கின்றோம். அதே நேரத்தில் எங்களுக்கு வசந்தம் தொலைக்காட்சி நிறுவனமும் வழி காட்டி உதவுகிறார்கள்.
வளர்ந்து வரும் மலேசியா, சிங்கப்பூர் கலைத்துறைக்கு தமிழ் ஊடகங்களின் ஆதரவு இப்போது தான் பெருகி வரும் நிலையில், இன்னும் அதிகமான ஆதரவு இருந்தால் மட்டுமே இப்படைப்புகளை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்று கூறி பேட்டியை நிறைவு செய்தார் ஜெயா இராகிருஷ்ணன்.
‘சத்ரியன்’ தொடரில் பிரபல வசந்தம் தொலைக்காட்சி நடிகர்களுடன், இயக்குநர் வெங்கா ராமசாமி, புரவலன் நாராயணசாமி, மதியழகன், ஜெய்நேஷ், எம்எஸ் லிங்கம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த தொடரை அப்பாஸ் அக்பர் இயக்கியுள்ளார்.
மலேசியாவின் பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கார்த்திக் ஷாமலன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அவருடன் அவரது குழுவினரான ரவின் மனோகரன், திலீப் குமார், கபிலன், லோகன் மனோகரன், தினேஷ் உள்ளிட்டோரும் பணியாற்றியுள்ளனர்.
சிங்கப்பூரைச் சேர்ந்தவரும், உலக அளவில் புகழ்பெற்றவருமான இசையமைப்பாளர் சபீர் தபாரே ஆலம் இந்த தொடருக்கு இசையமைத்து பாடல்வரிகளும் எழுதியுள்ளார். அவருடன் இணைந்து பார்த்திபன் சீதாராமனும் பாடல்வரிகள் எழுதியுள்ளார். இந்த தொடருக்கு மலேசியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் வித்யாசாகர் ஒலிப்பதிவு செய்துள்ளார்.
– ஃபீனிக்ஸ்தாசன்
(படங்கள்: சத்ரியன் பேஸ்புக்)
‘சத்ரியன்’ தொடரை கீழ்காணும் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகக் காணலாம்:-