கோலாலப்பூர், ஏப்ரல் 21 – ‘முருகா’, ‘புடுச்சிருக்கு’ போன்ற தமிழ் படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் அசோக்.
மலேசியாவின் ஹவுஸ் ஆப் தாரா எனும் நிகழ்வு ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து, வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு கே.எல்.சென்ட்ரலிலும், இரவு 8.00 மணிக்கு பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவிலும் ஃபிரீக்-ஏ-தோன் ஃபிளாஷ் மோப் நடன நிகழ்வு நடத்தவுள்ளார்.
இந்நிகழ்வில் சிந்தாமணி டிவைன் லைட் ஆசிரமத்தை சேர்ந்த குழந்தைகளும், உள்ளூர் நடன கலைஞர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அசோக், “இந்த நடன நிகழ்வு பொதுமக்களுடன் இணைந்து நடத்தப்படும் ஒரு கொண்டாட்ட நிகழ்வாக அமையும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக இந்த திடீர் நடன நிகழ்வை (ஃபிளாஷ் மாப்) தாம் இந்தியாவில் நடத்தி வந்ததாகவும், இதுவரையில் அதற்கு நிறைய மக்களின் ஆதரவுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
“இந்த நடன நிகழ்வை மலேசிய மக்கள் மத்தியில் நடத்த முடிவெடுத்து இதனை ஏற்பாடு செய்தேன் இந்த நிகழ்வு வெறும் நடன நிகழ்வாக மட்டும் அமையாது, இது ஒரு உடற்பயிற்சியை மையமாகக் கொண்ட நடன நிகழ்வாக நடைபெறும்” என்றும் அசோ தெரிவித்துள்ளார்.
இந்த நடன நிகழ்வைப் பற்றி தெரிந்துகொள்ள ‘Freak-a-thon with Ashok Kumar’ என்ற பேஸ்புக் பக்கத்தை பார்வையிடலாம்.