கோலாலம்பூர், ஏப்ரல் 23 – எதிர்வரும் 2020-ம் ஆண்டில், மலேசியா வளர்ச்சியடைந்த ஒரு நாடாக இருப்பது சந்தேகமே என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
“2020-ல், நாம் நல்ல வருமானம் பெறும் நாடாக இருப்போம். ஆனால் வளர்ச்சியடைந்த நாடாக இருக்கப்போவதில்லை” என இன்று கோலாலம்பூரிலுள்ள பெர்ஜெயா டைம் ஸ்கொயர் தங்கும்விடுதியில் நடைபெற்ற உலக வலைப்பதிவாளர்கள் மற்றும் நட்பு ஊடகங்கள் கருத்தரங்கில் மகாதீர் தெரிவித்துள்ளார்.
“2020-ம் ஆண்டை நோக்கிய மலேசியாவின் பார்வையை கடந்த 1991-ம் ஆண்டு அறிமுகம் செய்த போது ஒரு தவறு செய்துவிட்டேன். 2020-ல் மலேசியா வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்கும் என அறிவித்தேன். ஆனால் வளர்ந்த நாடு என்றால் என்னவென்று விளக்கமளிக்கத் தவறிவிட்டேன்” என மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வளர்ச்சியடைந்த நாடு என்றால் தனக்கென தனி வழியை வகுத்துக் கொள்ள வேண்டும். மாறாக பிற நாடுகளைப் பார்த்து அதை அப்படியே பின்பற்றக் கூடாது என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை ‘இண்வெஸ்டர் மலேசியா 2015’ மாநாட்டில் பிரதமர் நஜிப் துன் ரசாக், மலேசியாவின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்த அதே நேரத்தில், மகாதீர் இந்த கருத்தைக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.