கோலாலம்பூர், ஏப்ரல் 24 – இணைய தணிக்கை அவசியம் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார். அதேவேளையில் தனது சீடெட் வலைப்பக்கத்தை முடக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
“தயவு செய்து அந்த வலைப்பக்கத்தை முடக்க வேண்டாம். அதேசமயம் இணையம் வழி நம்மிடம் வந்து சேரும் குப்பைகளை தடுக்கப் பாருங்கள்,” என்று உலக வலைப்பதிவாளர்கள் மற்றும் நட்பு ஊடகங்களுக்கான கருத்தரங்கில் அவர் கூறியபோது, பார்வையாளர்கள் மத்தியில் பலத்த சிரிப்பலை எழுந்தது.
ஏராளமானவர்களை எரிச்சலூட்ட சமூக ஊடகங்கள் தனக்கு உதவுவதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் இதைத் தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும், எரிச்சலூட்டுவதால் முரண்பாடுகள் ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.
“அதே சமயம் ஒரு சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டாலும், நாம் ஏதேனும் முக்கியமாக செய்ய வேண்டியிருந்தால் அதை செய்யத் தான் வேண்டும். உதாரணமாக, ஒருவர் பதவி விலக வேண்டும் என்று சொல்ல வேண்டியிருப்பதைக் குறிப்பிடலாம்.”
“ராஜினாமா செய்வதில் என்ன தவறு இருக்கிறது? நானும் கூட ராஜினாமா செய்தேன்,” என்றார் மகாதீர்.
பிரதமர் நஜிப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு கூறினார். தனது வலைப்பக்கத்திற்கு இதுவரை 30 மில்லியன் பேர் வருகை தந்திருப்பதாக தம்மிடம் தெரிவிக்கப்பட்டது என்றார் அவர்.
“ஒவ்வொரு பார்வையாளரிடமும் 10 காசு கட்டணம் பெற்றிருந்தால் நான் இந்நேரம் கோடீஸ்வரன் ஆகியிருப்பேன். ஆனால் எனக்கு அது ஒரு பொருட்டல்ல. என்னைப் பொறுத்தவரை அனைவருக்கும் உரிய தகவல் போய் சேர வேண்டும்.
“இணையத் தணிக்கை என்பது அவசியம் தேவை. ஏனெனில் சமூக ஊடகமும் கத்தியும் ஒன்று. ஒரு கத்தியைக் கொண்டு அழகான சில பொருட்களை செதுக்க முடியும். அதைக் கொண்டு ஒருவரைக் குத்தி கொல்லவும் முடியும்,” என்றார் மகாதீர்.