கோலாலம்பூர், ஏப்ரல் 24 – பாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் முன்னாள் கணவரை கைது செய்யவும் அவருடைய மகளை கண்டுபிடிக்கவும் தேசிய காவல் படைத் தலைவருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அந்த உத்தரவின் அமலாக்கத்திற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் தடைவிதித்தது.
அத்தடையை எதிர்த்து வழக்குத் தொடர கூட்டரசு நீதிமன்றம் நேற்று முன்தினம் இந்திராகாந்திக்கு அனுமதி அளித்தது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவிற்கு தலைமை வகித்த மலாயா தலைமை நீதிமதி டான்ஸ்ரீ ஜூல்கிப்லி அஹ்மட் மக்கினுடன் இதனை அறிவித்தார்.
டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் எம்.போங், டான்ஸ்ரீ சூரியாடி ஹா ஒமார், டான்ஸ்ரீ அஹ்மட் ஹாஜி மாஅரோப், டத்தோ ஜஹாரா இப்ராஹிம் ஆகியோர் மற்ற நீதிபதிகள் ஆவர். இந்திராகாந்தியின் கடைசி மகள் பிரசன்னா டிக்சாவை அவரிடம் ஒப்படைக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும் அவரை ஒப்படைக்காமல் தலைமறைவான தன் முன்னாள் கணவர் அன்வார் மகமட் ரிதுவான் அப்துல்லாவை கைது செய்ய ‘ஜஜிபி’ டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் முன்னதாக மறுத்துவிட்டது.
இந்திராவிடன் ஒப்படைக்க மறுத்ததற்காக நீதிமன்ற அவதூறு குற்றத்திலிருந்து விடுவிக்க இந்த நீதிபதிகள் குழு நேற்று முன்தினம் மறுத்துவிட்டது. இந்திராகாந்திக்கு 10,000 வெள்ளி செலவுத் தொகை வழங்கும்படி அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கூட்டரசு நீதிமன்றத்தின் ஏக நீதிபதிகளும் பின்னர் கூடி இந்த வழக்கை விசாரிப்பார்கள் என தாம் நம்புவதாக இந்திராவின் வழக்கறிஞர் எம்.குலசேகரன் கூறினார்.
இதனிடையே 11 மாத குழந்தையாக இருந்த போது ரித்துவானால் அழைத்துச் செல்லப்பட்ட தன் மகளை தான் இனி சந்திக்க முடியும் என இந்திரா நம்பிக்கை தெரிவித்தார். ஏப்ரல் 8-ஆம் தேதி ஏழு வயதை அடையும் பிரசனாவை பார்க்காமல் தான் மிகவும் கவலைப்படுவதாக அவர் கூறினார்.