கோலாலம்பூர், ஏப்ரல் 26 – பிரதமர் நஜிப்பின் தந்தை துன் அப்துல் ரசாக்கிடம் தாம் பட்ட நன்றிக் கடனுக்காகவே பின்னாட்களில் நஜிப் பிரதமராகத் தாம் பிரசாரம் மேற்கொண்டதாக துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.
எனினும் அதற்காக தாம் இப்போது வருத்தப்படுவதாக குறிப்பிட்ட அவர், 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம் உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் விளக்கமளிக்க நஜிப்பால் முடியவில்லை என்றார்.
துன் அப்துல் ரசாக்கை தமது ஆசானாகவும் முன்மாதிரியாகவும் கருதியதாகத் தெரிவித்த அவர், எனினும் நஜிப்பின் தவறுகளை தம்மால் புறந்தள்ள முடியவில்லை என்றார்.
“கடந்த 1974ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது பிரதமரான துன் ரசாக் அமைச்சரவைக்குள் என்னைக் கொண்டு வந்தார். பிறகு துணைப் பிரதமராக பதவி வகித்து பிரதமர் ஆனேன். அவருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்,” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.
துன் ரசாக்கிடம் பட்ட நன்றிக் கடனுக்காக நஜிப்பை பிரதமராக்க தாம் கடுமையாக உழைத்து, அதில் வெற்றியும் கண்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எங்கே தவறு நடந்தது என்பது தமக்குத் தெரியவில்லை என்றார்.
“துன் ரசாக்கின் பிள்ளைகளுக்கு உதவ நினைக்கிறேனே தவிர, அவர்களை தொல்லைக்குட்படுத்தவோ, பலிகடா ஆக்கவோ விரும்பவில்லை. 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தில் கணக்கில் காட்டப்படாத பல பில்லியன் ரிங்கிட் குறித்து விளக்கம் அளிக்க நஜிப்பால் முடியவில்லை. நஜிப் பிரதமராக நீடித்தால் அம்னோவும் தேசிய முன்னணியும் அடுத்த பொதுத் தேர்தலில் தோல்வி காண்பது உறுதி. எனினும் பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டாண்டுகள் இருப்பதால் இன்னும் காலம் கடந்து விடவில்லை. நஜிப் பதவி விலகினால் மக்களின் நம்பிக்கையை தேசிய முன்னணி மீட்டெடுக்க நிச்சயம் உதவுவேன்,” என்று மகாதீர் கூறியுள்ளார்.