கோலாலம்பூர், மே 6 – அண்மையில் பெட்டாலிங் சாலையில் தாம் மேலாடையைக் கழற்றி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதை சபாவைச் சேர்ந்த முன்னாள் மாடல் அழகி பெர்சானா அவ்ரில் சொலுண்டா நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.
இதையடுத்து அவர் 7 ஆயிரம் வெள்ளி பிணைத் தொகையில் விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக, நடந்த சம்பவம் சாதாரண குற்றம் என்பதால், பெர்சாமாவை குறைந்த
பிணைத் தொகையில் விடுவிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் விடுத்த
கோரிக்கையை அடுத்து பிணைத் தொகையானது 10 ஆயிரம் வெள்ளி என்பதிலிருந்து 7
ஆயிரமாக குறைக்கப்பட்டது.
கடந்த மாதம் 28-ஆம் தேதி பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக தன்
மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டை பெர்சானா (32 வயது) மறுத்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
இந்நிலையில் பெர்சானா தனது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்
என்றும், இரு வாரங்களுக்கு ஒருமுறை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஆஜராக
வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தீபகற்ப மலேசியாவை விட்டு மே 29-ஆம் தேதி வரை வெளியேறவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி பெட்டாலிங் சாலையில் தாம் சாப்பிட்ட உணவுக்கு,
18 வெள்ளி தர மறுத்து, பெர்சானா தனது மேலாடையைக் கழற்றி ஒழுங்கீனமாக
நடந்து கொண்டது காணொளியாக பதிவானதால், அவர் மீது
குற்றம் சாட்டப்பட்டுள்ளது.