Home கலை உலகம் எம்.ஆர் ராதா பேரன் சதிஷ் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி!

எம்.ஆர் ராதா பேரன் சதிஷ் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி!

755
0
SHARE
Ad

சென்னை, மே 10 – மறைந்த பிரபல நடிகர் எம்.ஆர். ராதாவின் பேரனும், மறைந்த நடிகர் எம்.ஆர்.ஆர். வாசுவின் மகனுமான சதீஷ்,  குன்றத்தூர் அருகே உள்ள பூந்தண்டலம் பண்ணை வீட்டுக்குப் படப் பிடிப்புக்காக நேற்று சென்றார். அப்போது அவர் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டத்தில் நீரில் மூழ்கினார்.

MRR-Vasus-son-Sathish (late)மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்த 44 வயதான சதீஷ் (படம்) மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார்.

சம்பவத்திற்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

#TamilSchoolmychoice

இவருக்கு மகேஸ்வரி(41) என்ற மனைவியும், பிரீத்தி, பவித்ரா, ஸ்ரீகமலிகா என 3 மகள்கள் உள்ளனர். இவர்களில் பிரீத்திக்கு மட்டும் திருமணமாகி விட்டது.

ரத்தக்கண்ணீர் படம்

நடிகர் எம்.ஆர்.ராதாவின் நடிப்பில் மிகவும் பிரபலமான பழைய தமிழ்த் திரைப்படமான ‘ரத்தக்கண்ணீர்’ படத்தை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப, புதிய முறையில் திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் எம்.ஆர்.ஆர்.வாசு சதீஷ் ஈடுபட்டு வந்தார். இதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று படப்பிடிப்புக்கான இடத்தை பார்த்து வந்தார் என்று தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று முன்தினம் எம்.ஆர்.ஆர்.வாசு சதீஷ் தனது நண்பர்களுடன் குன்றத்தூர் அடுத்த பூந்தண்டலம், கிருஷ்ணா நகர் பகுதியில் சினிமா படப்பிடிப்புக்காக நீச்சல் குளத்துடன் கட்டி வாடகைக்கு விடப்பட்டு உள்ள ஒரு வீட்டுக்கு சென்றார்.

அங்கு படப்பிடிப்புக்கான இடத்தை பார்வையிட்ட அவர், பின்னர் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது தண்ணீருக்குள் சென்ற அவர், நீண்டநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், நீச்சல் குளத்தில் இறங்கி நீருக்கு அடியில் மயங்கி கிடந்த எம்.ஆர்.ஆர்.வாசு சதீசை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

அப்போது அவர் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்து விட்டு மயங்கிய நிலையில் இருப்பது தெரிந்தது. உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே எம்.ஆர்.ஆர்.வாசு சதீஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில் காவல் துறையினர், எம்.ஆர்.ஆர்.வாசு சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.