சிங்கப்பூர், மே 12 – கச்சா எண்ணெய் இறக்குமதியில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவை, சீனா மிஞ்சிவிட்டது. சீனாவின் பொருளாதாரம் பல்வேறு தடுமாற்றங்களை சந்தித்து வந்தாலும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க சீனா விரும்பவில்லை.
அதன் காரணமாக கடந்த மாதம் முதல் கச்சா எண்ணெய் இறக்குமதியில் உலக அளவில் முன்னிலை பெற்றுள்ளது.
சீனாவில் ஆண்டுதோறும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனால், பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு வழக்கத்தைவிட உச்சத்தில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, எண்ணெய் தட்டுப்பாட்டை நீக்க இறக்குமதியை அந்நாட்டு அரசு அதிகரித்து வருகிறது. இது சீனாவின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக் கட்டையாக உள்ளது என பல்வேறு நிதி நிர்ணய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
எனினும், சீன அரசை பொருத்தவரை குறைவான விலையில் எண்ணெய் மற்றும் குறைந்த வட்டி விகிதம் ஆகியவை அந்நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திருப்பும் என நம்புகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும், சீனா 7.4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இதே காலகட்டத்தில், அமெரிக்கா நாள் ஒன்றுக்கு 7.2 மில்லியன் பேரல் இறக்குமதி செய்துள்ளது. இதன் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சீனா முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இந்த நிலை, அடுத்த சில மாதங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார சரிவால், கடந்த ஜூன் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை உலக அளவில் கச்சா எண்ணெய் விலை 60 சதவீதம் அளவில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.