சிங்கப்பூர், மே 12 – ‘டிரான்ஸ்’ (Drones) எனப்படும் ஆளில்லா விமானங்களை கண்காணிக்கவும், அவற்றின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம், அவற்றை இயக்குவதற்கு அடுத்த மாதம் முதல் பல்வேறு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட இருக்கின்றன.
ஆளில்லா விமானங்களின் பயன்பாடும், புழக்கமும் அமெரிக்க இராணுவத்தால் ஏற்பட்ட ஒன்றாகும். அல்கொய்தா தீவிரவாதிகளுடன் நடைபெற்று வந்த சண்டையின் போது, தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளை ஜிபிஎஸ் உதவியுடன் கண்காணித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தவே முதன் முதலில் பயன்பட்டது.
பின்னாளில், இந்த டிரான்கள் புகைப்படங்களை எடுப்பதற்கும், சினிமா துறைகளிலும், பொழுது போக்கு அம்சங்களிலும் பயன்படத் துவங்கி விட்டன. ரிமோட் கண்ட்ரோல் தொழில்நுட்பம் மூலம் இவற்றை இயக்க முடியும் என்பதால், மற்றவர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்த டிரான்களால் தொடர் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்தவே சிங்கப்பூர் அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய சட்டம் கொண்டு வர காரணமாக இருந்த இரண்டு முக்கிய சம்பவங்களை அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் லுய் டக் இயூ நாடாளுமன்றத்தில் விவரித்தார். கடந்த மாதம் சிங்கப்பூர் எம்ஆர்டி தடத்தில் ஆளில்லா விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. அதேபோல் கடந்த வாரத்திலும் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றாலும், அவற்றால் விபத்துகளும், தீவிரவாத தாக்குதல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று லுய் டக் தெரிவித்தார்.
இதனை எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர். எனினும், புதிய விதிமுறைகளால் டிரான்களின் வர்த்தகப் பயன்பாடு பாதிக்கப்படலாம் என்று சிங்கப்பூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.