Home நாடு சிலுவை விவகாரம்: காவல்துறை விசாரணை முடிந்தது!

சிலுவை விவகாரம்: காவல்துறை விசாரணை முடிந்தது!

753
0
SHARE
Ad

ஷா ஆலம், மே 12 – தாமான் மேடான் தேவாலயத்தில் சிலுவையை அகற்றக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பிலான காவல்துறையின் விசாரணை முடிந்துவிட்டதாக சிலாங்கூர் காவல்துறை துணைத் தலைவர் டத்தோ அப்துல் ரகீம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

Crossremoved

விசாரணை அறிக்கை அரசு துணை வழக்கறிஞரிடம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“தற்போது விசாரணையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். இனி விசாரணை அறிக்கை அரசு துணை வழக்கறிஞரிடம் அளிக்கப்படும். வழக்குப் பதிவு செய்ய போதுமான தகவல்கள் உள்ளனவா என அவர் முடிவு செய்வார்,” என செய்தியாளர் சந்திப்பொன்றில் அப்துல் ரகீம் தெரிவித்தார்.

அக்குறிப்பிட்ட சம்பவத்தையடுத்து ஏராளமானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக குறிபிட்ட அவர், எத்தனை பேரிடம் விசாரணை நடந்தது என்பதை தம்மால் துல்லியமாகக் குறிப்பிட இயலவில்லை என்றார்.

கடந்த மாதம் தாமான் மேடானில் உள்ள தேவாலயத்தின் வெளிப்புறத்தில்
வைக்கப்பட்டிருந்த சிலுவை சின்னத்தை அகற்றுமாறு 50 பேர் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.இதையடுத்து அச்சின்னத்தை தேவாலய நிர்வாகம் அகற்றியது.

“இதுவரை நாங்கள் யாரையும் கைது செய்யவில்லை. ஆனால் போராட்டத்தில்
பங்கேற்றவர்கள், அதுகுறித்து எங்களிடம் புகார் அளித்தவர்கள் எனப் பலரிடம்
விசாரணை நடத்தியுள்ளோம்,” என்றார் அப்துல் ரகீம்.

முன்னதாக இந்தப் போராட்டத்தில் ஐஜிபியின் சகோதரர் டத்தோ அப்துல்லா
அபுபாக்கரும் பங்கேற்றதாக தகவல் வெளியானது. இது சர்ச்சையை ஏற்படுத்திய
நிலையில், காவல்துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால் போராட்டத்தில் தாம் பங்கேற்கவில்லை என்றும், போராட்டக்காரர்களுக்கு
உதவும் நோக்கிலேயே தாம் அங்கு சென்றதாகவும் அப்துல்லா அபுபாக்கர் பின்னர்
விளக்கமளித்தார்.