Home நாடு தாமான் மேடான் தேவாலயத்தின் ஞாயிறு பிரார்த்தனை தடங்கலின்றி நேற்று நடந்தேறியது!

தாமான் மேடான் தேவாலயத்தின் ஞாயிறு பிரார்த்தனை தடங்கலின்றி நேற்று நடந்தேறியது!

697
0
SHARE
Ad

Crossremoved

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 27 – கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தின்போது சிலுவையை அகற்றக் கோரி ஒரு குழுவினர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, நாடு தழுவிய அளவில் பிரபலமாகிவிட்ட தாமான் மேடான் கிறிஸ்துவ தேவாலயத்தில் நேற்று வழக்கமான பிரார்த்தனைகள் எவ்வித பிரச்சனைகளும் இன்றி நடந்தேறின.

அங்கு பிரார்த்தனைக்கு வந்திருந்தவர்களுக்கு நல்லெண்ண அடிப்படையில் வரவேற்பு மலர்கள் வழங்கப்பட்டன.

#TamilSchoolmychoice

பிரார்த்தனைக்கு மூத்த மதபோதகர் பால் பாக்கியநாதன் தலைமை தாங்கினார்.

சிலுவை அகற்றும் போராட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற முதல் பிரார்த்தனைக் கூட்டம் இதுவாகும். “மலேசியர்களுக்காக மலேசியா” இயக்கத்தைச் சேர்ந்த அஸ்ருல் முகமட் காலிட் மற்றும் சில ஜசெக தலைவர்கள் தேவாலயத்திற்கு வந்திருந்தவர்களுக்கு மலர்களை வழங்கினர்.

அவ்வாறு வந்திருந்தவர்களில் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் லிம் லிப் எங் (சிகாம்புட்), தெரசா கோக் (செபுத்தே), ஹீ லோய் சியான் (பெட்டாலிங் ஜெயா செலாத்தான்), புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ்  ரிஷ்யாகரன் ஆகியோரும் அடங்குவர்.

இதற்கிடையில் மீண்டும் சிலுவையை அதே இடத்தில் நிர்மாணிப்பது குறித்து தாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் ‘தெய்வீக’ அனுமதிக்காக நாங்கள் காத்திருப்போம் என்றும் தேவாலயத்தின் மதபோதகர் பால் பாக்கியநாதன் தெரிவித்தார்.

அகற்றப்பட்ட சிலுவையை மீண்டும் அங்கேயே வைக்க சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு அனுமதி வழங்கியிருந்தது. இருப்பினும் மீண்டும் சிலுவையை நிர்மாணிக்க நாங்கள் அவசரப்படவில்லை என்றும் பால் பாக்கியநாதன் தெரிவித்ததாக ‘ஸ்டார்’ இணைய செய்தித் தளம் குறிப்பிட்டிருக்கின்றது.

இந்த தேவாலயத்தில் தமிழில் மதபோதனைகள் வழங்கப்பட்டு வந்தன. வாரந்தோறும் சுமார் 50 பேர் இந்த தேவாலயத்தின் ஞாயிறு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு வந்தனர்.

சில நாட்களுக்கு முன்பாக இந்த தேவாலயத்தின் பொறுப்பாளர்கள் தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர்.