Home உலகம் புலம்பெயர் தமிழர்களுக்காக என்னை கைது செய்ய அரசு முயற்சி – ராஜபக்சே!

புலம்பெயர் தமிழர்களுக்காக என்னை கைது செய்ய அரசு முயற்சி – ராஜபக்சே!

458
0
SHARE
Ad

Mahinda2கொழும்பு, மே 13 – புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காகவே என்னைக் கைது செய்ய அரசு முயற்சிக்கின்றது என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை அபயராம விஹாரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராஜபக்சே கூறியதாவது;

“இந்த நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்க நாம் பெரும் தியாகத்தை செய்தோம். நாம் ஆட்சியைக் கையளித்தபோது நாட்டின் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால், தற்போதைய அரசு பணம் இல்லை என்று கூறுகிறது”.

“முன்னாள் அதிபர் கூட பணம் இல்லை என்று கூறுகிறார். இவர்களது ஒருங்கிணைப்பில் பிரச்சனை இருக்கின்றது என்பது இதிலிருந்து தெரிகிறது. அத்துடன், ஆட்சி நடத்த முடியாத நிலைமையையும் இது காட்டுகிறது. இது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்”.

#TamilSchoolmychoice

“கள்வர், கள்வர் என்று ஒருவரை 100 தடவைகள் கூறினால் மக்கள் அதை நம்பிவிடுவார்கள். அதைத்தான் இந்த அரசு செய்கிறது. தேர்தல் காலத்தின்போது கள்வர்களைப் பிடிக்கப்போகிறோம் என்றனர். இப்போது கள்வர்களைக் கைது செய்கிறோம் என்கின்றனர்”.

“என்னிடம் 18 பில்லியன் ரூபாய் சொத்துகள் இருப்பதாகக் கூறுகின்றனர். இலங்கைக்கு கிடைத்த பணத்தைவிட நாம் எடுத்த பணம்தான் அதிகமாக இருக்கிறது என்று கூறுகின்றனர். 18 பில்லியன் ரூபாய் சொத்தைக் காட்டுங்கள்”.

“எனக்கும் பார்க்க ஆசையாக உள்ளது. இந்தப் பணம் எத்தியோப்பியா, சுவிட்சர்லாந்து, உக்ரைன் போன்ற நாடுகளில் இருப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர். அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் கூட இதைத்தான் கூறுகின்றனர்”.

“எமக்குள்ள கெளரவத்தை இல்லாது செய்ய முயற்சிக்கின்றனர். புலம்பெயர் தமிழர்களின் பழிவாங்கல் தற்போது வேறு வழியில் நடக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் என்னைச் சிறைப்பிடிக்க முயற்சித்தனர்”.

“இவர்களின் தேவைக்கேற்பவே அரசு செயற்படுகின்றது. என்னையும் கைது செய்ய முயற்சிக்கின்றனர். நான் எதற்கும் தயாராக இருக்கிறேன். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான் இந்தக் கைதுகளுக்கான உத்தரவைப் பிறப்பிக்கின்றார்”.

“நிதி மோசடி எனக் கூறி பசில் ராஜபக்சேவை கைது செய்தனர். அடுத்ததாக நிதி மோசடி எனக் கூறி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்தனர். வாகன மோசடி எனக் கூறி சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்தனர்”.

“முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் எனது சகோதரருமான கோத்தபய ராஜபக்சேவையும் கைது செய்ய முயற்சிக்கின்றனர். அவர் இராணுவத்தினருக்கு நன்மைதான் செய்தார். ஆனால், அவரைக் கைது செய்ய முயற்சிக்கின்றனர்”.

“தமக்குப் போட்டியாக நினைப்பவர்களை அரசு தரப்பினர் கைது செய்ய நினைக்கின்றனர். நான் தேர்தலில் தோல்வியடைந்ததும் அமைதியாகத்தான் இருந்தேன்”.

“ஆனால், மக்கள்தான் கோரிக்கை விடுத்து என்னை மீண்டும் அழைத்தனர். அதனால், நான் சிறு சிறு சந்திப்புகளை நடத்தினேன். அதைக் கண்டு இவர்கள் அஞ்சிவிட்டனர். நான் எந்தச் சவால்களுக்கு முகம்கொடுக்க தயாராக உள்ளேன்”.

“இப்பொழுது என்னை புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரலின் படி கைதுசெய்து அவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்க ரணில் உள்ளிட்ட புதிய அரசாங்கம் முயற்சி செய்கின்றனர்” என்று கூறினார் ராஜபக்சே.