Home நாடு “நீதிமன்ற உத்தரவால் 2013 மத்திய செயலவை செல்லுபடியாகும் என்பது அர்த்தமல்ல” – சரவணன் விளக்கம்

“நீதிமன்ற உத்தரவால் 2013 மத்திய செயலவை செல்லுபடியாகும் என்பது அர்த்தமல்ல” – சரவணன் விளக்கம்

551
0
SHARE
Ad

unnamed

கோலாலம்பூர், மே 13 –  வரும் மே 27-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களையும் நீதிமன்றம் கேட்டு விசாரணை நடத்திய பின்னர் தீர்ப்பை அறிவிக்கவுள்ள காரணத்தால் தான், தற்போது 2009 மத்திய செயலவைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மஇகா தேசிய உதவித்தலைவர் டத்தோ எம்.சரவணன் இன்று மதியம் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் சரவணன் கூறுகையில்,”நீதிமன்ற அறிவித்துள்ளதன் மூலம் 2013 மத்திய செயலவை செல்லுபடியானதாகவோ அல்லது ஆர்ஓஎஸ் உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டதாகவோ கருத வேண்டாம். வரும் மே 27-ம் தேதி வரை தான் ஆர்ஓஎஸ் உத்தரவுகளை தற்காலிகமாக நிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.”

#TamilSchoolmychoice

“2009 மத்திய செயலவை கூட்டங்களை கூட்டுவதற்கோ அல்லது முடிவுகளை எடுப்பதற்கோ அனுமதி இல்லை என்று நீதிமன்றம் கூறியிருந்தாலும், 2009 மத்திய செயலவை சார்பில் வழக்கறிஞர்கள் தங்களது கட்சிக்காரர்கள் அது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என ஏற்கனவே உறுதி அளித்திருக்கின்றனர்.”

“நேற்று இரவு 11 மணியளவில், மஇகா கிளைத்தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட குறுஞ்செய்தி ஒன்றை நானும் பெற்றேன். தேசியத் தலைவர் அனுப்பியதாக வந்த அந்த குறுஞ்செய்தியை யார் அனுப்பியது என்று தெரியவில்லை. அதில் 2013 மத்திய செயலவை கூட்டத்தை தேசியத் தலைவர் ஏற்பாடு செய்யப்போவதாகவும், ஆர்ஓஎஸ் அனுப்பிய கடிதங்கள் அனைத்தும் அடுத்த விசாரணை நடக்கும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மஇகா கிளைத் தலைவர்களிடமிருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வந்தன. அதனால் தான் இந்த செய்தியாளர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்து விளக்கமளிக்கின்றேன்”  இவ்வாறு சரவணன் தெரிவித்துள்ளார்.

மேலும், நீதிமன்றம் அறிவித்துள்ள இந்த இடைக்கால தடை கட்சிக்கும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நல்லது தான் என்று குறிப்பிட்ட சரவணன், ஒருவேளை ஆர்ஓஎஸ் உத்தரவுகளை குறிப்பிட்ட தேதிக்குள் செயல்படுத்தாமல் இருந்தால் கட்சியின் பதிவே ரத்தாகியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

“நேற்று நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு, கட்சிக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் ஒருவகையில் நன்மை தான். காரணம் நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை அறிவிக்கும் வரை கட்சியின் பதிவு ரத்தாகாது” என்று சரவணன் கூறியுள்ளார்.

வழக்கறிஞர்கள் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது

தங்களது வழக்கறிஞர்கள் மூலம் பழனிவேலின் வழக்கறிஞருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது என்றும், அதில் வழக்கில் வாதியாக இருப்பவர் (Plaintiff) 2013 மத்திய செயலவையை கூட்டவோ அல்லது நீதிமன்றம் விடுத்த உத்தரவுகளை மீறும் படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.

“வரும் மே 27-ம் தேதி, ஒருவேளை நீதிமன்றம் ஆர்ஓஎஸ் முடிவுகளை ரத்து செய்வதாக உத்தரவிட்டால், அப்போது அந்த முடிவை ஏற்றுக் கொள்கிறோம். இது நமது பிரச்சனை அல்ல மற்றும் நாம் புகார்தாரர்கள் அல்ல. இது ஆர்ஓஎஸ் அனுப்பிய கடிதத்தினால் ஆர்ஓஎஸ்-க்கு ஏற்பட்ட பிரச்சனை” என்று சரவணன் விளக்கமளித்தார்.

இந்த செய்தியாளர் கூட்டத்தில், சரவணனுடன் செனட்டர் டத்தோ ஜஸ்பால் சிங்கும் கலந்து கொண்டு இந்த வழக்கின் பின்னணி குறித்தும், அதன் தற்போதைய நிலவரம் குறித்தும் விளக்கமளித்தார்.