புதுடெல்லி, மே 13 – பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நாளை (வியாழக்கிழமை) சீனா செல்கிறார். சீன அதிபர் சீ ஜின் பிங்குடன் அவர் பல்வேறு ராணுவ விஷயங்கள் குறித்து பேச உள்ளார்.
பாகிஸ்தானுக்கும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசுக்கும் சீன அரசு சமீபகாலமாக ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புதிய மின் திட்டங்கள், ரெயில் பாதைகள் அமைக்க சீனா உதவுகிறது.
இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுபற்றி சீன அதிபருடன் பிரதமர் மோடி பேச உள்ளார். எல்லைப் பிரச்சனை குறித்தும் அவர் விவாதிக்க உள்ளார்.
மேலும் சென்னை– பெங்களூர் புல்லட் ரெயில் திட்டம் உள்பட பல்வேறு ஒப்பந்தங்களில் மோடி கையெழுத்திட உள்ளார். சீன பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று அளித்த பேட்டியில்,
‘‘எனது சீனப் பயணம் இரு நாடுகளுக்கிடையிலான நட்பை மேலும் அதிகப்படுத்தும் சீனா– இந்தியாவின் நட்பு ஆகிய பிராந்தியத்தில் மட்டுமின்றி வளரும் நாடுகளிடையே புதிய மைல்கல் ஆக இருக்கும்’’ என்றார்.
சீன அதிபர் சீ ஜின்பிங்கை கடந்த ஓராண்டில் 3 தடவை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார். எனவே இது தனது சீன பயணம் வளரும் நாடுகளின் வறுமையை வேரறுக்க உதவும் என்று மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.