புத்ராஜெயா, மே 19 – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் 22 ஆண்டு கால ஆட்சியில், உலகத் தலைவர்களுக்கு அவர் அனுப்பிய முக்கியமான கடிதங்களின் தொகுப்பு, ‘Selected Letters to World Leaders’ என்ற பெயரில் இரண்டாவது நூலாக நேற்று புத்ராஜெயாவில் வெளியீடு கண்டது.
இதன் முதல் தொகுப்பு நூல் கடந்த 2008-ம் ஆண்டு வெளியிடப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றது. அந்த நூல் 9 முறை மறுபதிப்பும் செய்யப்பட்டது.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்த புதிய நூல், கடந்த 1987 -ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மலேசியத் தூதரகம் மற்றும் அனைத்துலக நட்புறவுகள் பற்றி விவரிக்கின்றது. குறிப்பாக மலேசியா சிங்கப்பூருக்கு இடையிலான உறவு குறித்த பல தகவல்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
அதேவேளையில், மகாதீருக்கும், மூன்று அமெரிக்க அதிபர்களான ஜார்ஜ் எச்.புஷ், பில் கிளிண்டன் மற்றும் ஜார்ஜ் டபிள்யூ புஷ், மூன்று பிரிட்டிஷ் பிரதமர்கள் மார்கரெட் தச்சர், ஜான் மேஜர் மற்றும் டோனி ப்ளேயர், பாகிஸ்தான் தலைவர்கள் பர்வேஷ் முஷாரப் மற்றும் பெனாசிர் பூட்டோ, ஈராக் அதிபர் சதாம் உசைன், லிபியான் தலைவர் முவாம்மார் கடாஃபி, கூபா தலைவர் பிடரல் கேஸ்ட்ரோ மற்றும் தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு இடையிலான கடிதப் பறிமாற்றங்கள் அந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
நேற்று புத்ராஜெயாவில் இந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய மகாதீர், தான் இந்த கடிதங்களை எல்லாம் விருப்பப்பட்டு எழுதவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
“நான் ஒரு சிறந்த கடிதம் எழுதும் நபர் கிடையாது. நான் கடிதம் எழுதுவதை வெறுப்பவன். ஆனால் நான் பிரதமராக இருந்த சமயத்தில் கடிதம் எழுதவில்லை என்றால் அது வழக்கத்திற்கு மாறாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த நூலின் பதிப்பாசிரியரான டான்ஸ்ரீ அப்துல்லா அகமட் கூறுகையில், மகாதீருக்கும், சிங்கப்பூர் பிரதமர்கள் லீ குவான் இயூ மற்றும் கோ சோக் தோங் ஆகியோருக்கு இடையிலான கடிதங்களே “மிகவும் ஆச்சர்யமும், ஆழமான விசயங்களும்” கொண்டது என்று தெரிவித்துள்ளார்.