கோலாலம்பூர், மே 19 – புதிதாக வாங்கப்பட்டுள்ள அரசாங்க விமானத்தில் மாநில ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள் ஆகியோர் மட்டுமே பயணம் செய்ய விரும்புவதாகப் பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷாஹிடன் காசிம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் இன்று ஜசெக (சிரம்பான்) நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டனி லோக் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ஷாஹிடன், அரசாங்கத் தனி விமானத்தை அரசர், அரசி ஆகியோருடன் பிரதமர் மற்றும் துணைப்பிரதமர் உள்ளிட்டோர் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.
“சுல்தான்கள், மாநில ஆட்சியாளர்கள், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், வெளிநாடுகளில் இருந்து அரசாங்க விருந்தினர்கள், மூத்த அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் இந்த அரசாங்க தனி விமானத்தைப் பயன்படுத்தலாம். இவர்களைத் தவிர இந்த விமானத்தை யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்பது அரசாங்கத்தின் சொகுசு விமானம் மற்றும் விமானப் படை விமானங்கள் ஆகியவற்றின் சட்டதிட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றும் ஷாஹிடன் கூறியுள்ளார்.
(புதிதாக வாங்கப்பட்டுள்ள ACJ320விமானம்)
அரசாங்கத்தில் கடந்த 16 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வந்த சொகுசு விமானத்தை மாற்றி, அண்மையில் புதிய விமானம் ஒன்று வாங்கப்பட்டுள்ளது.
அந்த விமானத்தைப் பயன்படுத்துபவர்களின் பட்டியலை வெளியிடுமாறு ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டனி லோக் இன்று நாடாளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் நஜிப் துன் ரசாக் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பழைய விமானத்தில் பாதுகாப்பு வசதிகள் குறைந்து வருவதாலும், அதன் பராமரிப்புச் செலவு அதிகரித்து வருவதாலும் புதிய விமானம் வாங்கப்பட்டதாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.