கங்கார் : பெர்லிஸ் மாநிலத்திலுள்ள ஆராவ் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம் அதிரடியாக அங்கு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
1986 முதல் 1995 வரை இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக ஷாஹிடான் பணியாற்றியுள்ளார். பின்னர் பெர்லிஸ் மந்திரி பெசாராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.
2013 முதல் மீண்டும் அவர் ஆராவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அவருக்குப் பதிலாக டத்தோ ரோசாபில் அப்துல் ரஹ்மான் இங்கு அம்னோ சார்பில் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
ஷாஹிடான் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளராகக் கருதப்பட்டாலும் அவருக்குரிய நேரம் கடந்து விட்டது என அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி கூறியிருந்தார்.
நான் ஆராவ் தொகுதியின் வேட்பாளருக்கு எதிராக நிற்கவில்லை, மாறாக அம்னோ தலைவர் சாஹிட்டுக்கு எதிராகப் போட்டியிடுகிறேன் என ஷாஹிடான் தெரிவித்திருக்கிறார்.
இந்தத் தொகுதியில் துன் மகாதீரின் தலைமையிலான பெஜூவாங் கட்சியும் போட்டியிடுகிறது.