கொழும்பு, மே 20 – இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்து நேற்று முன்தினத்துடன் 6 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் அதனை நினைவு கூர்ந்து இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த திங்கட்கிழமை பிரிவினைவாதத்தை தோற்கடித்த தினமாக பிரதான நிகழ்வு நடந்தது.
இந்நிலையில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையில் கொழும்பில் யுத்த வெற்றி நிகழ்வு நடத்தப்படவுள்ளது. மகிந்த ராஜபக்சே தலைமையிலான யுத்த வெற்றி நிகழ்வினை அவர் தரப்பு ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளதுடன், அந்த நிகழ்வு நாளை மாலை 5 மணியளவில் கொழும்பு விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
மகிந்த ராஜபக்சே ஆதரவு தரப்பினரின் தாய் நாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் யுத்த வெற்றி வீரர்கள் எனும் பொருளில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக அவரின் ஊடகவியளாலர்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவத்தினர் நினைவு கூரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த நிகழ்வில் உயிரிழந்த இராணுவத்தினரின் உறவினர்கள் மகிந்த ராஜபக்சேவுக்கு ஆதரவான அமைப்புக்களை சேர்ந்தவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நாளை மாலை சிவில் அமைப்புகள் சில ஒன்றிணைந்து நாடாளுமன்றத்துக்கு முன்னாலுள்ள இராணுவ நினைவுத் தூபிக்குல் அருகில் நினைவஞ்சலி நிகழ்வொன்றை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.