மும்பை, மே 22 – மும்பையில் பட்டதாரி இளைஞர் ஒருவருக்கு வேலைக்கான தகுதி இருந்தும் அவர் இஸ்லாமியர் என்ற காரணத்தால் வேலை தர தனியார் நிறுவனம் மறுத்துள்ள விவகாரம் இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களுக்கு இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் உள்ள ஹரிக்கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் என்னும் நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி பணிக்காக முதுநிலை வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்ற செஷான் அலி கான் என்ற இளைஞர் விண்ணப்பித்து இருந்தார். நேர்காணல் கடிதத்திற்காக காத்திருந்த அவருக்கு அந்நிறுவனத்திடமிருந்து விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்பட்டதற்கான கடிதம் வந்தது.
அதனை படித்துப் பார்த்த செஷான் அலி கான் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில் தங்கள் நிறுவனம் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்து இருந்தது. இதனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த விவகாரத்தை அவர் ஊடகத்தில் அம்பலப்படுத்தினார்.
இது நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதத்தை காரணம் காட்டி வேலை தர மறுக்கும் மும்பை நிறுவனத்துக்கு எதிராக பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கண்டனங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து அந்நிறுவனம் தங்கள் தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், மதம், இனம், ஜாதி அடிப்படையில் தாங்கள் ஆட்களை சேர்ப்பதில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
எனினும், அந்நிறுவனத்தின் கொள்கைகளும், நடவடிக்கைகளும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என வழக்கு தொடரப்பட்டுள்ளது.