லண்டன், மே 24 – உலகை தங்களது தீவிரவாத செயல்களால் கட்டுக்குள் கொண்டுவர நினைக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர், பாகிஸ்தானிடமிருந்து அடுத்த 12 மாதங்களுக்குள் முதல் அணு ஆயுதத்தை வாங்க இருப்பதாக வெளியான செய்திகள் உலக அளவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளன.
இது தொடர்பான அறிவிப்புகள் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் பத்திரிக்கையான ‘டபிக்’ (Dabiq)-ல் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தீவிரவாதிகள், தங்களது இயக்கம் மிகப்பெரிய அளவில் விரிவடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், நைஜீரியாவில் செயல்பட்டு வரும் போகோஹரம் தீவிரவாதிகளும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் சேர்ந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அது சாத்தியமானால் மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் அமைப்புகளை உள்ளடக்கிய பெரும் இயக்கமாக ஐஎஸ்ஐஎஸ் உருவாகிவிடும் என்றும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தற்போது தங்களிடம் பல மில்லியன் டாலர்கள் அளவுக்கு நிதி உள்ளதால், விரைவில் பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுதங்களை வாங்க இருப்பதாகவும் ஐஎஸ் இயக்கத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இதற்காக சில பாகிஸ்தான் உயர் அதிகாரிகளுக்கும், தரகர்களுக்கு சில மில்லியன் டாலர்களை லஞ்சமாக கொடுக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அணு ஆயுதங்கள் தங்கள் கைகளுக்கு கிடைக்கும் பட்சத்தில் தங்களது முதல் இலக்கு அமெரிக்கா தான் என்றும் தெரிவித்துள்ளது உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. எனினும், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் அடுத்த கட்ட முயற்சிகளுக்கு முன் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக நாடுகள் முடிவு செய்துள்ளன.