Home கலை உலகம் பரதநாட்டிய ஜாம்பவான்களின் சங்கமத்தில் ‘வர்ணாஞ்சலி’ – மாபெரும் நாட்டிய நிகழ்ச்சி!

பரதநாட்டிய ஜாம்பவான்களின் சங்கமத்தில் ‘வர்ணாஞ்சலி’ – மாபெரும் நாட்டிய நிகழ்ச்சி!

706
0
SHARE
Ad

unnamed (4)கோலாலம்பூர், மே 27 – தென்னிந்தியாவின் மிகத் தொன்மையான கலைகளுள் ஒன்றான பரதக்கலை, கடல் கடந்து உலகின் பல தேசங்களிலும் ஊடுருவி, இன்றும் நிலைத்து நிற்கிறது என்றால், நம் உதிரத்தில் ஊறிப்போன கலா ரசனையும், நாட்டியத் திறமையும் தான் காரணம்.

தமிழர்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பரதநாட்டியத்தில், ஆடுபவரின் உடலும், மனமும் அக்கலையுடன் லயித்து, ஒவ்வொரு அங்க அசைவும் மயில்தோகையின் சிறகென விரியும் போது, காண்பவர்களின் உள்ளம் பரவசமடைவதே அதன் தனிச் சிறப்பு.

அந்த வகையில், காணும் இடங்களெல்லாம் பச்சைப் பசேலென பசுமை போர்வை போர்த்தி நிற்கும் நம் மலேசியத் திருநாட்டில், இயற்கையோடு இணைந்து நமது பரதக் கலையும் செழிப்புடன் பரந்து விரிந்துள்ளதற்குச் சான்றாக ஜாம்பவான்கள் பலர் உள்ளனர்.

#TamilSchoolmychoice

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய், ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களது குருமார்களிடத்தில் ஆடல், பாடல் கலைகளைக் கற்று சிறந்து விளங்கி வருகின்றனர்.

இந்நிலையில், மலேசிய நாட்டிய உலகைச் சேர்ந்த இரண்டு ஜாம்பவான்கள் ஒன்றாக இணைந்து ஒரு மாபெரும் நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினால் எப்படி இருக்கும்?

அந்தத் தருணம் வெகு தொலைவில் இல்லை.

Untitled

காரணம், நாட்டிய ஜாம்பவான்களான குருஸ்ரீ சந்திரமோகன் ராமசாமியும், குருஸ்ரீ அஜித் பாஸ்கரன் தாஸும் இணைந்து தங்களது நாட்டிய மாணவர்களின் நிதிக்காக, எதிர்வரும் மே 30-ம் தேதி, சனிக்கிழமை, இரவு 8 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, சிவிக் செண்டர் அரங்கத்தில், மாபெரும் நாட்டிய நிகழ்ச்சியான ‘வர்ணாஞ்சலி’-ஐ அரங்கேற்றவுள்ளனர்.

இதற்கான அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பு, நேற்று முந்தினம் தலைநகரில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் குருஸ்ரீ சந்திரமோகன் பேசியதாவது:-

“வர்ணாஞ்சலி என்பது வர்ணங்களின் கலப்பு. இந்த பெயரை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்றால் நாட்டியத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கும். எனக்கு ஒரு பாணி உள்ளது. அஜித் பாஸ்கரன் மாஸ்டருக்கென்று ஒரு பாணி உள்ளது. நாங்கள் இருவரும் எங்களது மாணவர்களுடன் இணைந்து அவரவர் பாணியில் ஓர் அழகான நிகழ்ச்சியை படைக்கவுள்ளோம்.”

unnamed (5)

 (குருஸ்ரீ சந்திரமோகன் மற்றும் குருஸ்ரீ அஜித் பாஸ்கரன் தாஸ்)

“இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு எங்களது மாணவர்கள் சிலரின் சலங்கை பூஜைகளுக்குப் பயன்படுத்தவுள்ளோம். அதுமட்டுமல்ல, ஒரு சில மாணவர்களின் தாயார் தனித்து வாழ்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையிலும் இந்த நிதி திரப்படுகின்றது. இதே நிகழ்ச்சி மீண்டும் அதே சிவிக் செண்டரில் வரும் டிசம்பர் 5-ம் தேதி, இரவு 8 முதல் 10 மணி வரை மீண்டும் நடைபெறவுள்ளது.”

“இந்நிகழ்ச்சியில் மொத்தம் 9 நடனங்கள் படைக்கின்றோம். நான் 3 குச்சிப்புடி நடனங்களை ஆடவுள்ளேன். இரண்டு வகையான மிருதங்கம் பயன்படுத்துகின்றோம். மிருதங்கத்தில் சிறந்து  விளங்கும் தீபனும், தரணியும் மிருதங்கம் வாசிக்கின்றார்கள். ஒரு நல்ல நோக்கத்திற்காக செய்யப்படும் இந்நிகழ்ச்சி நிச்சயமாக அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும்.” என்று தெரிவித்தார்.

அடுத்ததாக இச்சந்திப்பில் பேசிய ஸ்வர்ணா ஆர்ட்ஸ் நிறுவனர் குருஸ்ரீ அஜித் பாஸ்கரன் தாஸ், “சென்ற வருடம் சென்னையில் ஒரு நினைவாஞ்சலி விழாவில் நானும், சந்திரமோகன் மாஸ்டரும் கலந்து கொண்டபோது எங்களுக்குள் நல்ல நட்பு வளர்ந்தது. அந்த நட்பு மேலும் வளர்ந்து இன்று இந்த நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ளது.” என்று தெரிவித்தார்.

மேலும், மலேசியாவில் பரதநாட்டியத்திற்கு நல்ல வரவேற்பும், மாணவர்களிடம் ஆர்வமும் தொடர்ந்து இருந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஜோகூர் பாருவில் தங்கள் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

“ஆனால், நடனத்தைப் படித்துத் தெரிந்து கொள்வதோடு, மாணவர்கள் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன. அந்த இடைவெளியை தான் பூர்த்தி செய்ய முயற்சி செய்கின்றோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மலேசியக் கலை உலகம் நிறுவனர் எஸ்.பி.சரவணன் மற்றும் குழுவினர், ஆசிரியையும், பிரபல அறிவிப்பாளருமான தமிழ் வாணி கருணாநிதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பரதநாட்டிய மாணவர்கள், நடன ஆசிரியர்கள் மட்டுமின்றி, பரதநாட்டிய நடனத்தைக் கண்டுகளிக்க ஆர்வமுள்ள பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

(நடனப்பள்ளி மாணவர்களின் நிதிக்காக படைக்கப்படும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கீழ்க்காணும் நபர்களைத் தொடர்பு கொண்டு அழைப்பிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.)

திருமதி கலை – 017-6375451 , மணிமேகலை – 010- 2103820.

-செய்தி: ஃபீனிக்ஸ்தாசன்,

 படங்கள்: எஸ்பி பிரபா.