புதுடெல்லி, மே 28 – ‘மன்மோகன் சிங் தலைமையிலான கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெயரளவில் மட்டும்தான், முழுவதும் ஆட்சி அதிகாரம் செலுத்தியது சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் என்பது நாட்டுக்கு தெரியாதா’ என்று குற்றம்சாட்டினார் பிரதமர் மோடி.
பாஜக ஆட்சியின் ஓராண்டு நிறைவை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில்; “அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு தான் எந்த ஆட்சியும் நடக்க வேண்டும். அதுவும், ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் பிரதிநிதிகள் தான் பிரதமர் உட்பட அமைச்சர்களாக நிர்வகிக்க வேண்டும்”.
“அவர்களும் தன்னி்ச்சையாக நடந்து கொள்ள முடியாது. அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு தான் எந்த அதிகாரத்தையும் செலுத்த வேண்டும். இது தான் எங்கள் ஆட்சியில் கடந்த ஓராண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எங்களை யாரும் ஆட்டிப்படைக்கவில்லை; அதிகாரம் செலுத்தவில்லை”.
“ஆனால், கடந்த ஆட்சியில், அதாவது மன்மோகன் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி வெறும் பெயரளவுக்கு தான் இயங்கி வந்தது. ஆனால், முழுக்க முழுக்க ஆட்சி அதிகாரங்களை செலுத்தியது சோனியாவும், ராகுலும் தான்”.
“நாங்கள் யாரிடமும் கட்டளை வாங்கி மக்கள் பணிகளை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு எஜமானர்கள் மக்கள் தான். ஆனால், காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, திரைமறையில் ஆட்சி செய்தது சோனியா தான் என்று நாட்டு மக்களுக்கு தெரியாதா என்ன?”
“ நான் பிடிவாதம் பிடிக்கிறேன்; ஆதிக்கம் செலுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை அடக்கி ஆள்வதாக சோனியா கூறியுள்ளார். இ்ந்த ஓராண்டில் நாங்கள் என்ன செய்தோம் என்பதை நாங்கள் காட்டி உள்ளோம். அதில் குறை சொல்லட்டுமே? கண்டிப்பாக அவர்களால் சொல்ல முடியாது”.
“நாங்கள் தவறு செய்யமாட்டோம். ஊழல் செய்ய மாட்டோம். ஊழல் செய்ததால் தான் மக்கள் காங்கிரஸ் ஆட்சியை தூக்கி எறிந்தனர். காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் செய்த பாவத்துக்காக தண்டிக்கப்பட்டவர்கள். அப்போதாவது புரிந்து கொண்டு தவறை திருத்தி கொள்வர் என்று எதிர்பார்த்தோம்”.
“ஆனால், அவர்கள் உணர்ந்ததாக தெரியவில்லை. வளர்ச்சிக்கு பாடுபட்டு வருவது நாங்கள். ஆனால், காங்கிரசோ, வளர்ச்சிக்கு எதிரானது என்று கடந்த ஆட்சி காலத்தில் நிரூபித்து விட்டது. நிலம் கையகப்படுத்தும் சட்டம் பற்றி காங்கிரஸ் குறை மேல் குறை சொல்லி வருகிறது”.
“நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்பது 120 ஆண்டு காலமாக இருந்து வருகிறது. அதில் சில திருத்தங்களை கொண்டு வந்து, காங்கிரஸ் ஆட்சி, கடந்த முறை 120 நிமிட விவாதம் கூட இல்லாமல் நிறைவேற்றியது”.
“ஆனால், ஏதோ நாங்கள் நிலத்தை எல்லாம் அபகரித்து விவசாயிகளை நடுத்தெருவில் விட்டு விடுவது போல நாடகம் ஆடுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர். நிலம் சம்பந்தப்பட்ட உரிமைகள், அதிகாரங்கள் எல்லாம் மாநில அரசுகளிடம் தான் உள்ளன”.
“மத்திய அரசுக்கு சம்பந்தமே இல்லை. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சட்டத்தில் காங்கிரஸ் செய்த தவறுகளை திருத்தி புதிய சட்டத்தை, விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று கொண்டு வந்துள்ளோம். அரசியல் என்ற கண்ணாடியை கழற்றி விட்டு பார்த்தால் கண்டிப்பாக பலரும் பாராட்டுவர்”.
“ஆனால், இதில் உண்மை தெரியாமல் எதிர்கட்சிகள் குழப்பி வருகின்றன. இதுபோலத்தான் சரக்கு மற்றும் சேவை வரி திருத்த சட்டம். இது மாநிலங்களுக்கு கூடுதல் வருமானம் குவிக்க கூடியது. இதையும் காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் எதிர்க்கின்றன”.
“மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பின் தான் நாங்கள் இதை கொண்டு வந்தோம். ஆனால், திட்டமிட்டு பாஜ அரசு நல்லது செய்து விடக்கூடாது என்று எதிர்கட்சிகள் எதிர்க்கின்றன”.
“என்னை பொறுத்தவரை இந்த இரு சட்டங்களும் உரிய நேரத்தில் கண்டிப்பாக நிறைவேற்றப்பட்டு விடும் என்று முழு நம்பிக்கை கொண்டிருக்கிறேன்” என மோடி தெரிவித்தார்.