பீகிங், ஜூன் 4 – சீனாவில் யாங்ட்ஸே ஆற்றில் கப்பல் கவிழ்ந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்தது. மாயமான 416 பேரை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் கடந்த 1-ஆம் தேதி பயங்கர சூறாவளி காற்று வீசியது.
அந்த சூறாவளியில் சிக்கி, ஆசியாவின் மிகப்பெரிய யாங்ட்ஸே ஆற்றில், 456 பேருடன் நான்ஜிங் நகரில் இருந்து சோங்கிங் நகர் நோக்கி சென்ற பயணிகள் கப்பல் கவிழ்ந்தது. முதலில், 458 பேர் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகின.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சீன பிரதமர் லீ கெகியாங், நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு விரைந்தார். மீட்பு பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு, ஆலோசனைகள் வழங்கினார். 12 பேர் மீட்கப்பட்டனர். 5 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், யாங்ட்ஸே ஆற்றில், 220 கி.மீ. சுற்றளவு பகுதியில் கப்பல் பயணிகளை தேடும் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.
இதில் 110-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சீன விமானப்படை, 5 ஹெலிகாப்டர்களையும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தி உள்ளது.
நேற்று மதிய நிலவரப்படி, இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. கப்பல் கவிழ்ந்த இடத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் நேற்று 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பலரது உடல்கள் நெடுந்தொலைவுக்கு அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சுவதாக அரசு செய்தி வெளியிட்டது.
நீரில் மூழ்கித்தேடுவதில் நிபுணத்துவம் பெற்ற வீரர்கள் 200-க்கும் மேற்பட்டோர், பயணிகளை தண்ணீருக்கு அடியில் தேடி வருகின்றனர்.
கடற்படை தளபதி ஹூய் டோங்யான், “மீட்புப் பணியில் முழுமூச்சில் ஈடுபட்டு வருகிறோம்” என பேட்டி ஒன்றில் கூறினார். இன்னும் 416 பேர் என்ன ஆனார்கள் என தெரியாத நிலையில், அவர்களது உறவினர்கள் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே மீட்புப்பணிகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து பிரதமர் லீ கெகியாங், வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.