மும்பை , ஜூன் 7 – இந்தியாவின் மிக முக்கிய இணைய வர்த்தக நிறுவனமான ‘ஸ்னாப்டீல்’ (Snapdeal), ‘டாடா ஹௌசிங்’ (Tata Housing) நிறுவனத்துடன் இணைந்து இணையத்தின் மூலம் வீடுகளை விற்பனை செய்யும் வர்த்தகத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த வர்த்தகத்தின் மூலம் தற்போது முதல் முறையாக 1.1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை ஸ்னாப்டீல் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “இந்தியாவில் நில பேர துறையில் (Real Estate) நாங்கள் கால் பதித்து, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சில நம்பிக்கையான நிறுவனங்களிடமிருந்து வீடுகளை வாங்குவதற்கான வழி வகைகளை செய்து கொடுத்தோம். டாடா ஹௌசிங் மூலமாக பயனுள்ள அதேசமயத்தில் சிக்கனமான பல்வேறு வீடுகள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன.”
“இந்த வர்த்தகத்தில் ஸ்னாப்டீல், வீடுகளுக்கான பத்திரங்களை மற்றும் ஆவணங்களை சரி பார்த்தல் போன்ற பணிகளை ஏற்றுக் கொள்ளும். பாதுகாப்பான வீடுகளை ஸ்னாப்டீல் மூலம் வழங்குவதே எங்களின் நோக்கம்” என்று தெரிவித்துள்ளது.
இணையம் மூலம் வீடுகள் விற்பனையை ஸ்னாப்டீல் கடந்த 2014-ம் ஆண்டே தொடங்கி இருந்தாலும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு விற்பனையாவது இதுவே முதல் முறை.
இந்தியாவில் தேக்க நிலையில் இருந்த நில பேர துறை கடந்த 6 மாதத்தில் மட்டும் 400 சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளது. அதன் காரணமாக ஸ்னாப்டீல், டாடா ஹௌசிங் போன்ற நிறுவனங்களின் இந்த வர்த்தகம் போதுமான வளர்ச்சியை பெற்றுள்ளது.