கோலாலம்பூர், ஜூன் 9 – மலேசியாவின் பிரபலப் பத்திரிக்கையாளர் எஸ்.பி.சரவணன் உருவாக்கத்தில் இதுவரை இணைய ஊடகமாகச் செயல்பட்டு வந்த ‘மலேசியக் கலை உலகம்’, இனி தங்களது படைப்புகளை அச்சு வடிவில் இதழாகவும் வெளியிடவுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிமுக விழா, கடந்த ஜூன் 6-ம் தேதி சனிக்கிழமை, தமிழக சினிமாவின் அனுபவம் வாய்ந்த மூத்த இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் தலைநகர் சோமா அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில், மலேசியக் கலை உலகத்தின் ஜூன் மாத இதழ், பிரபல அறிவிப்பாளரும், தயாரிப்பாளரும், நடிகையுமான புன்னகைப்பூ கீதாவின் அட்டைப்படத்துடன் வெளியிடப்பட்டது.
மேலும், மலேசியக் கலைத்துறையைச் சேர்ந்த முக்கியக் கலைஞர்கள் பங்கேற்க, மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவில், நடிகர் சிகே, இயக்குநர் எஸ்டிபாலா, ஜாஸ்மின், டத்தின்ஸ்ரீ ஷைலா நாயர், புன்னைகைப்பூ கீதா, மாஸ்டர் குருஸ்ரீ சந்திரமோகன், எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான அக்னி சுகுமார், எழுத்தாளர் இன்பா சுப்ரமணியன், டத்தோ சந்திரகுமணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
மலேசியக் கலைத்துறையில் தனது இளம் வயது முதல் நடித்து வருபவர் நடிகர் கேஎஸ். மணியம். ஆரம்ப காலத்தில் நாடகங்களில் அறிமுகமாகியவர் பின்னர் பல்வேறு மலேசிய தொலைக்காட்சிப் படங்கள், நாடகங்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவைகளில் தனது தனித்துவமான நடிப்பாற்றலாலும், தெளிவான வசன உச்சரிப்பினாலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர்.
மலேசிய சினிமாவில் இத்தனை வருடங்கள் சிறப்பான பங்களிப்பினைச் செய்த கேஎஸ் மணியம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(முழுக்க முழுக்க மலேசிய சினிமாச் செய்திகளை உள்ளடக்கியுள்ள ‘மலேசியக் கலை உலகம்’ இதழை வாங்க அதன் நிறுவனர் மற்றும் ஆசிரியரான எஸ்.பி.சரவணனைத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்:0166579424)
தொகுப்பு: ஃபீனிக்ஸ்தாசன்
படங்கள்: மலேசியக் கலை உலகம் பேஸ்புக்.