Home கலை உலகம் அஸ்ட்ரோ அனைத்துலக சூப்பர் ஸ்டார் தொடங்குகின்றது! 1 இலட்சம் அமெரிக்க டாலர் பரிசு!

அஸ்ட்ரோ அனைத்துலக சூப்பர் ஸ்டார் தொடங்குகின்றது! 1 இலட்சம் அமெரிக்க டாலர் பரிசு!

703
0
SHARE
Ad

IMG_8386கோலாலம்பூர், ஜூன் 10 – ஆண்டுதோறும் மலேசிய இரசிகர்களைக் கவர்ந்திழுத்து வரும் அஸ்ட்ரோ பாடல் திறன் போட்டி, இந்த ஆண்டு 14 ஆண்டுகளைக் கடந்து இந்த முறை ‘அனைத்துலகத்’ தோற்றமும், வடிவமும் காண்கின்றது.

இந்தப் போட்டிகளை இன்று கோலாலம்பூரின் பிரபல தங்கும் விடுதியில் தெற்காசிய நாடுகளுக்கான கட்டமைப்புக்கான சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

IMG_8398

#TamilSchoolmychoice

அஸ்ட்ரோவின் ‘அனைத்துலக சூப்பர் ஸ்டார்’ போட்டியாக உருவெடுக்கும் இந்தப் போட்டியில் ஐந்து நாடுகளின் பாடகர்கள் பங்கெடுக்க உள்ளனர். ஐந்து நாடுகளிலிருந்து தலா 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஐந்து பேர் கொண்ட மூன்று குழுக்களாகப் பிரிந்து இந்தப் போட்டியில் பங்கெடுப்பர்.

மலேசியா, சிங்கப்பூர், கனடா, இந்தியா, மொரிஷியஸ், ஆகியவையே அந்த ஐந்து நாடுகளாகும். மூன்று குழுக்களுக்கும் வானவில், வெள்ளித்திரை, விண்மீன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலின்படி இந்த மாபெரும் இசைப் போட்டியில் பங்கெடுப்பவர்கள் பின்வருமாறு:-

வானவில் குழு

அலிண்டா (மலேசியா), ராகுல் சாத்து (கனடா), விக்னேஷ் (இந்தியா), அக்‌ஷயா (சிங்கை), யோகேந்திரா (மொரிஷியஸ்)

IMG_8346

வெள்ளித்திரைக் குழு

லோகேஸ்வரன் (மலேசியா), அபிஷேக் (கனடா), சுதர்சன் (இந்தியா), லலிதா (சிங்கை), நஞ்சினி (மொரிஷியஸ்).

விண்மீன்

கணேசன் (மலேசியா), பாரிஜாதா (கனடா), திவ்யா (இந்தியா), சுதாசினி (சிங்கை), வீமணி (மொரிஷியஸ்)

வழிகாட்டிகள் – குரல் பயிற்றுநர்கள்

IMG_8378

மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு குழுக்களுக்கும் ஒரு வழிகாட்டி (Mentor) மற்றும் ஒரு குரல் பயிற்றுநர்   (Vocal Trainer) செயல்படுவர்.

வானவில் குழுவுக்குப் பிரபலத் தமிழக இசையமைப்பாளர் சிற்பி வழிகாட்டியாகவும், பிரபலப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகள் பிரசாந்தினி குரல் பயிற்றுநராகவும் செயல்படுவார்கள்.

வெள்ளித் திரைக் குழுவுக்குப் பிரபல இசையமைப்பாளர் ஆதித்தியன் வழிகாட்டியாகவும், மரியா ரோஷினி குரல் பயிற்றுநராகவும் செயல்படுவர்.

விண்மீன் குழுவுக்குப் பிரபலப் பின்னணிப் பாடகர் மனோ வழிகாட்டியாகவும், தீபிகா குரல் பயிற்றுநராகவும் இருப்பார்கள்.

அனைத்துலகத்  தரத்திலான போட்டிகள்

அனைத்துலக சூப்பர் ஸ்டார் போட்டி நிபுணத்துவ அடிப்படையில், வெளிப்படையான முறையில் அனைத்துலகத் தரத்தில் நடத்தப்படும்.

முதல் வாரம் தொடங்கி ஆறு வாரங்களுக்குப் போட்டியாளர்கள் போட்டிகளில் களமிறங்கித் தங்களின் திறன்களை வெளிப்படுத்துவார்கள்.

முதல் வாரத்தில் வானவில், வெள்ளித் திரை குழுக்களுக்கிடையிலான மோதலோடு போட்டிகள் தொடங்குகின்றன.

இரண்டாவது வாரத்தில் வானவில் குழுவோடு விண்மீன் களமிறங்க, மூன்றாவது வாரத்தில் வெள்ளித் திரையும், விண்மீனும் மோதுகின்றன.

அனைத்துலக சூப்பர் ஸ்டார் நடுவர்கள்

IMG_8367

இந்த மாபெரும் இசை யுத்தத்திற்கு 3 பேர் நடுவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் முதலாமவர் டி.இராஜேந்தர். ‘ஒரு தலைராகம்’ எனத் தொடங்கி கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது பன்முகத் திறமைகளால், தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்துத் தனது ஆளுமையைப் பதிவு செய்து வருபவர் டி.ஆர். எனப்படும் டி.இராஜேந்தர்.

சிம்பு எனப்படும் சிலம்பரசனின் தந்தை இவராவார்.

இரண்டாவது நடுவர் சத்யா. இவர் பிரபலப் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும் ஆவார். ‘எங்கேயும் எப்போதும்’ இவர் இசையமைத்த படமாகும்.

மூன்றாவது நடுவர் திருமதி ஷோபா சந்திரசேகர். இவரது கணவர் எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபல இயக்குநர் என்பதோடு விஜய்காந்த் போன்ற நடிகர்களைக் கண்டெடுத்துத் திரையுலகில் முன்னணிக்குக் கொண்டு வந்தவர்.

இன்றைக்கு அடுத்த தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகக் கருதப்படும் விஜய்யின் தாயாரான ஷோபா சந்திரசேகர் ஒரு சிறந்த கர்நாடகப் பாடகியுமாவார்.

விளம்பர ஆதரவாளர்கள்

அனைத்துலக சூப்பர் ஸ்டார் 2015இன் விளம்பர ஆதரவாளர்களாகப் ‘போ’ தேயிலை நிறுவனமும், மலிண்டோ ஏர் விமான சேவை நிறுவனமும் பங்கெடுக்கின்றனர்.

ஒரு இலட்சம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை

அஸ்ட்ரோவின் அனைத்துலக சூப்பர் ஸ்டார் போட்டிகளுக்கான முதல் பரிசுத் தொகை 1 இலட்சம் அமெரிக்க டாலராகும்.

இரண்டாம் நிலை வெற்றியாளருக்கான பரிசுத் தொகை 70,000 அமெரிக்க டாலராகும்.

மூன்றாவது பரிசு 40,000 அமெரிக்க டாலராகும்.

ஜூன் 6ஆம் தேதி முதல் அனைத்துலக சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சிகள் 

IMG_8335

சூப்பர் ஸ்டார் போட்டிகளின் 14 வருடகால கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளோடு ஜூன் 6ஆம் தேதி முதற்கொண்டு, அனைத்துலக சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சிகள் அஸ்ட்ரோவில் தொடங்கியுள்ளது.

போட்டிகள் ஜூன் 13ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு முதல் அஸ்ட்ரோ அலைவரிசைகளில் தொடங்குகின்றன.

இந்தப் போட்டிகளின் இறுதிச் சுற்று ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும்.

நேற்று நடைபெற்ற இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடிகர் பென்ஜி, அறிவிப்பாளர் சத்யா, அறிவிப்பாளர் யாஷினி ஆகியோர் கலகலப்பாக வழி நடத்தினர்.

செய்தி, படங்கள் – செல்லியல் ஆசிரியர் குழு