Home நாடு 1எம்டிபியின் கடன் – அருள் கந்தாவின் பொய்களை நம்பவில்லை: மகாதீர்

1எம்டிபியின் கடன் – அருள் கந்தாவின் பொய்களை நம்பவில்லை: மகாதீர்

643
0
SHARE
Ad

Dr-Mahathir-Mohamedகோலாலம்பூர், ஜூன் 10 – 1எம்டிபி நிறுவனத்தின் 42 பில்லியன் ரிங்கிட் கடன் தொகை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் அதன் தலைவர் அருள் கந்தா கந்தசாமி அளித்துள்ள விளக்கத்தை தாம் நம்பவில்லை எனத் துன் மகாதீர் தெரிவித்துள்ளார். ஏனெனில் அருள் கந்தா இதற்கு முன் பலமுறை பொய்களைக் கூறியிருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

“அருள் (படம்)  இதற்கு முன் பொய் சொல்லியிருக்கிறார். எனவே 42 பில்லியன் ரிங்கிட் கடன் குறித்து அவர் பொய் சொல்லியிருப்பார் என்பதை நம்ப இடமுள்ளது. 42 பில்லியன் ரிங்கிட் எங்கே போனது என்ற கேள்வி இன்னும் நிலவுகிறது,” என தனது இணைய வலைப் பக்கத்தில் மகாதீர் கூறியுள்ளார்.

Arul-Kandasamy

#TamilSchoolmychoice

பிரதமர் நஜிப்பை தாம் நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவதால் மட்டும் இந்தக் கடன் விவகாரம் முடிவுக்கு வரப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், அவ்வளவு பெரிய தொகை மாயமாகவில்லை என நஜிப் நிரூபிப்பது மட்டுமே பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாகப் பிரதமரும் நஜிப்பும் மகாதீரும் இவ்விவகாரம் குறித்து நேருக்கு நேர் சந்தித்துப் பேச வேண்டுமென அமைச்சர் கைரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதே 1எம்டிபியின் நோக்கம். அவ்வாறெனில், கடந்த 2009இல் இருந்து அரசுக்கு எவ்வளவு லாபம் கிடைத்துள்ளது? கடன்களுக்கு வட்டி செலுத்துவதற்காக ஏன் கடன் வாங்க வேண்டும்?” என்றும் மகாதீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“இது மக்களின் பணம். பேங்க் நெகாரா அளித்த அறிக்கை உட்பட பல்வேறு தரப்பினர் எழுப்பியுள்ள புகார்கள் குறித்து விசாரிக்க வேண்டியது காவல் துறை மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் கடமை,” என்று மகாதீர் வலியுறுத்தியுள்ளார்.