புது டெல்லி, ஜூன் 11 – பிரதமர் நரேந்திர மோடி என்னை விடச் சிறந்த விற்பனையாளராகத் திகழ்கிறார்” என இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முதல் அமைச்சர்கள் மாநாடு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங், பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் குறித்தும் அவரது செயல்பாடுகள் குறித்தும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அந்த மாநாட்டில் அவர், “நரேந்திர மோடி விளம்பரங்களிலும், விற்பனையிலும் என்னை விடத் தலை சிறந்தவராக உள்ளார். அதனை நாம் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். அவர் ஒரு கைதேர்ந்த விற்பனையாளர். பிரதமராக மட்டுமில்லாமல் தனது நிகழ்ச்சிகளுக்கான ஏற்பட்டாளராகவும், தகவல் தொடர்பில் வல்லுநராகவும் திகழ்ந்து வருகிறார்.”
“மக்களுக்காகக் காங்கிரஸ் கடந்த ஆட்சியில் பல்வேறு சிறப்பான திட்டங்களை உருவாக்கியது. ஆனால் நாம் அதை மோடி போல் சுயபுராணத்துடன் பெரிய அளவில் விளம்பரப்படுத்தவில்லை. நமது அரசின் சாதனைகளைப் போதுமான அளவுக்கு நாமும் விளம்பரப்படுத்தாவிட்டால், அது யாருக்கும் தெரியாமலே போய்விடும். இதனை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.