Home இந்தியா மியான்மருக்குள் சென்று தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த மோடி உத்தரவிட்டார் – மத்திய அமைச்சர் தகவல்!

மியான்மருக்குள் சென்று தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த மோடி உத்தரவிட்டார் – மத்திய அமைச்சர் தகவல்!

530
0
SHARE
Ad

modi111புதுடெல்லி, ஜூன் 11 – மியான்மருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் மீது உடனடியாகத் தாக்குதல் நடத்த பிரதமர் மோடி உத்தரவிட்டார் என மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், சான்டெல் மாவட்டத்தில், மாவோயிஸ்டுகள் பாணியில், கடந்த 4-ஆம் தேதி ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்கள் நடத்தினர்.

குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய இந்த தாக்குதல்களில் 20 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 20 ஆண்டுகளில் மணிப்பூரில் ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். இதனையடுத்து தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், மணிப்பூர் தாக்குதல்களில் தொடர்புடைய தீவிரவாதிகள், மேலும் தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அவர்கள் மியான்மர் பகுதியில் பதுங்கி இருப்பதாகவும் உளவுத் தகவல்கள் கிடைத்தன.

இதையடுத்து, இந்திய ராணுவம், விமானப்படை உதவியுடன், நேற்று காலை மியான்மர் எல்லைக்கு அப்பால், அதிரடி தாக்குதல்களை நடத்தியது.

அப்போது தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்தியா, எல்லைக்கு அப்பால் சென்று தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய இந்தச் சம்பவம், மிகவும் அபூர்வமான ஒரு நிகழ்வு எனக் கருதப்படுகிறது. மியான்மர் அரசின் ஒப்புதலுடன் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மியான்மருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த பிரதமர் மோடி உத்தரவிட்டார் என்ற தகவலை மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

“இந்திய ராணுவம், துணை ராணுவப் படைகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு, இந்திய ராணுவம் உள்ளே வராது என்று மியான்மரில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்குள் சென்றுவிடுவது, தீவிரவாதிகளின் வழக்கமான செயல்பாடாக உள்ளது”.

“இச்செய்திகள் தற்போது முழுவதும் தெளிவாகிவிட்டது. இதுவரையில் இல்லாத வகையில், நமது பிரதமர் மிகவும் தைரியமான முடிவினை எடுத்தார், மியான்மருக்குள் புகுந்து பயங்கரவாதிகளைப் பின்தொடர்ந்து உடனடியாகத் தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்திற்கு அனுமதி வழங்கினார்.” என்று தெரிவித்து உள்ளார்.

“இந்திய ராணுவம் மியான்மர் எல்லைக்குள் புகுந்து, இரண்டு தீவிரவாத முகாம்கள் மீது அதிரடியாகத் தாக்குதல் நடத்தி, முழு முகாமையும் அழித்துவிட்டுத் திரும்பியது என்பதை நாங்கள் உறுதிசெய்து உள்ளோம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.