இலண்டன், ஜூன் 11 – (தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி டேவிட் கெமரூன் தலைமையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமா என்பதை செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில் ஆராயும் கட்டுரை)
பிரிட்டனின் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தனிப் பெரும்பான்மையோடு கைப்பற்றியுள்ள கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் பிரதமராகியுள்ள டேவிட் கெமரூனின் அடுத்த கட்ட முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுவது ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பது குறித்த பொது வாக்கெடுப்புதான்.
எதிர்வரும் 2017ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா, தொடர்ந்து நீடித்திருக்க வேண்டுமா என்ற பொது வாக்கெடுப்பு மக்களிடையே நடத்தப்படவிருக்கின்றது
இது, டேவிட் கெமரூன் தனது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்த முக்கியமானதொரு திட்டமாகும்.
ஏன் பொது வாக்கெடுப்பு?
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா என ஏன் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது என்பது குறித்து கொஞ்சம் விரிவாகப் பார்க்க வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடியும் – சின்னமும்
1957ஆம் ஆண்டில் ‘ரோம் ஒப்பந்தம்’ என அழைக்கப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, லக்சம்பெர்க், நெதர்லாந்து, மேற்கு ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகளின் இணைப்பில் உருவாக்கப்பட்டது ஐரோப்பிய பொருளாதார மண்டலம் (European Economic Community). பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் (European Union) என இந்த நாடுகளின் பொருளாதாரக் கூட்டணி அழைக்கப்பட்டது.
ஒவ்வொரு ஐரோப்பிய நாடாக இதில் இணைந்து கொள்ள விரிவடைந்து கொண்டே போன இந்த கூட்டமைப்பில் 1 ஜனவரி 1973 முதல் பிரிட்டன் இந்த ஒன்றியத்தில் அதிகாரபூர்வமாக இணைந்தது.
ஜனநாயகம் ஆழமாக வேரூன்றியிருக்கும், வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியம், கால ஓட்டத்தில் பலம் வாய்ந்த பொருளாதார மண்டலமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு நிகரான பொருளாதார சக்தியாக ஐரோப்பிய மண்டலம் உருவெடுக்கம் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.
ஆனால், 1990ஆம் ஆண்டுகளில் சோவியத் ரஷியா கூட்டமைப்பிலிருந்து ஒவ்வொரு கிழக்கு ஐரோப்பிய நாடாக விடுதலை பெற்று வெளியேற, பின்னர் அந்த நாடுகளெல்லாம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து கொள்ளத் தொடங்கின.
பொருளாதார ரீதியாக பலவீனமாக இருந்த இந்த நாடுகள் அரசியல் காரணங்களுக்காகவே ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டன. இதன் காரணமாக, ஐரோப்பிய மண்டலம் சமச்சீர் அற்ற மண்டலமாக உருமாறியது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பிய நாடு என்ற சலுகையோடு, சுதந்திரமான பயணப் பரிமாற்றங்களைப் பயன்படுத்திக் கொண்டு, கிழக்கு ஐரோப்பா நாடுகளின் குடிமக்கள் பலர் இலண்டனுக்கு வேலைக்காக படையெடுத்துச் சென்று தங்களின் வாழ்க்கையையும் அங்கேயே அமைத்துக் கொள்ளத் தொடங்கினர்.
இதன்காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதால், கிழக்கு ஐரோப்பா மக்களின் அளவுக்கதிகமான குடிபெயர்ப்பால், பிரிட்டன்வாசிகள் தங்களின் வாழ்க்கைத் தரத்தையும், இனிய சூழலையும் இழந்து வருகின்றனர் என்ற ஆதங்கமும், இனியும் நாம் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தால் பிரிட்டன் தனது தனித் தன்மையை இழந்து விடும் என்ற கருத்தும் ஆழமாக பிரிட்டன் மக்களிடையே வேரூன்றி விட்டது.
இன்றுவரை, ஐரோப்பிய நாணயக் கூட்டமைப்பில் (யூரோ டாலர்) பிரிட்டன் சேராமல், தனது தனி நாணயத்தை நிலைநிறுத்தி வருகின்றது.
டேவிட் கெமரூனின் பொதுத் தேர்தல் வாக்குறுதி
இந்த சூழலில்தான், பிரிட்டன் மே 7ஆம் தேதி பொதுத் தேர்தலைச் சந்தித்தபோது, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இன்னும் நீடிக்க வேண்டுமா என்பது குறித்த பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவேன் என்ற வாக்குறுதியை டேவிட் கெமரூன் (படம்) மக்களுக்கு வழங்கினார்.
டேவிட் கெமரூனின் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றதற்கான காரணங்களுள் ஒன்று இந்த பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வாக்குறுதிதான் என்றும் ஒருசில அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
2017ஆம் ஆண்டில் இந்த பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அதற்கான முன்னேற்பாடுகளில் டேவிட் கெமரூனின் அரசாங்கமும் தற்போது மும்முரமாக இறங்கி விட்டது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமா என்ற வாக்கெடுப்பில், இலட்சக்கணக்கான கிழக்கு ஐரோப்பிய மக்கள் பங்கெடுக்க முடியாது என்றும் டேவிட் கெமரூன் அறிவித்து விட்டார்.
காரணம், இவர்கள் எல்லாம் எப்படியும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தொடர்ந்து நீடிக்கத்தான் வாக்களிப்பார்கள் என்பதால், அவர்கள் நியாயப்படி இந்த வாக்கெடுப்பில் பங்கெடுக்க முடியாது என்ற காரணத்தையும் முன்வைத்திருக்கின்றார் கெமரூன்.
2017ஆம் ஆண்டில் பிரிட்டன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பெரும்பான்மையில் வாக்களித்தால், அதன்மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்மாண அமைப்பு பலமாகப் பாதிக்கப்படும் என்பதோடு, ஐரோப்பாவில் மிகப் பெரிய அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஏற்படும்.
பிரிட்டனின் தனித்துவமும், ஆளுமையும் காப்பாற்றப்படும் என்றாலும், அதனால் பொருளாதார ரீதியாக பிரிட்டன் வலுவடையுமா – பலவீனமடையுமா என்பது காலம் தீர்மானிக்க வேண்டிய ஒரு கேள்வி.
எனவே, மிக முக்கியமான – உலக அளவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தப் போகும் 2017ஆம் ஆண்டின் பொது வாக்கெடுப்பை –
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா இல்லையா என்ற கேள்விக்கு விடைகாணும் மாபெரும் வரலாற்று சம்பவத்தின் முடிவைத் தெரிந்து கொள்ள –
பிரிட்டன் மக்கள் மட்டுமல்ல! அகில உலகமுமே காத்திருக்கின்றது!
-இரா.முத்தரசன்
பிரிட்டன் தேர்தல் தொடர்பான மற்ற கட்டுரைகள்:
பிரிட்டன் தேர்தல் பார்வை (1) : கிரிக்கெட் ஆட்ட இறுதி நிமிடங்கள் போல் பரபரப்பான – விறுவிறுப்பான முடிவுகள்!
பிரிட்டன் தேர்தல் பார்வை (2) – தொழிலாளர் கட்சியை காலை வாரிவிட்ட ஸ்காட்லாந்து மக்கள்!
பிரிட்டன் தேர்தல் பார்வை (2) – தொழிலாளர் கட்சியை காலை வாரிவிட்ட ஸ்காட்லாந்து மக்கள்!