மே 12 – (நடந்து முடிந்த பிரிட்டனின் பொதுத் தேர்தலில் நடந்தது என்ன – ஏன் கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி – தொழிலாளர் கட்சிக்குத் தோல்வி – அடுத்த கட்டம் என்ன – என்பதை செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில் அலசுகின்றது இந்தக் கட்டுரை)
வழக்கமாக பிரிட்டனில் நடைபெறும் தேர்தல்கள் தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே சூடுபிடித்து விடும். ஆனால், இந்த முறை ஏனோ, கடந்த ஒரு மாதமாக நடந்த பிரச்சாரத்தில் சூடும் இல்லை – சுறுசுறுப்பும் இல்லை. மந்தமும், ஆர்வமின்மையும்தான் மக்களிடத்தில் எங்கும் பளிச்சிட்டது.
காரணம், முன்னணிக் கட்சிகள் எதிலும் இன்றைக்கு கவர்ச்சிகரமான, பேச்சாற்றல் கொண்ட – மக்களை ஈர்க்கக் கூடிய தலைவர்கள் – என்று யாரும் இல்லை.
ஆனால், அதற்கு எல்லாம் சேர்த்து வைத்தாற்போல், தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கிய (பிரிட்டன் நேரப்படி) வியாழக்கிழமை (மே 7) பின்னிரவில் – ஏதோ டி-20 கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்ப்பதுபோல், பரபரப்பையும், அடுத்த என்ன ஆகுமோ என்ற விறுவிறுப்பையும் உலக மக்களிடையே ஏற்படுத்தியது வெளியிடப்பட்ட பிரிட்டனின் தேர்தல் முடிவுகள்.
தேர்தலுக்கு முன்புவரை டேவிட் கெமரூன் (படம்) தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை ஆதரவு விகிதாச்சாரத்தில் மிகவும் நெருங்கியிருந்தது எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி (லேபர் பார்ட்டி). ஒரு சதவிகித வித்தியாசம்தான் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் என்ற அளவுக்குக் கூட கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன.
இதனால், தொழிலாளர் கட்சியே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கருதப்பட்ட வேளையில், வாக்களிப்புக்கு பிந்திய கருத்துக் கணிப்புகளின்படி (Exit Poll), ஆளும் கன்சர்வேடிவ் கட்சியே மீண்டும் வெற்றி பெறும் என்ற அறிவிப்பு வெளியானது.
பிரிட்டிஷ் அரசியலின் மும்மூர்த்திகள் – (இடமிருந்து வலமாக) தொழிலாளர் கட்சியின் தலைவர் எட் மிலிபண்ட், லிபரல் கட்சியின் தலைவரும் கடந்த ஆட்சியில் துணைப் பிரதமராகவும் இருந்த நிக் கிளெக், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன். கடந்த மே 8ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பிய துருப்புகள் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் 70ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் – தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மறுநாள் – மூவரும் ஒன்றாக கலந்து கொண்டு மலர் வளையம் ஏந்தி வந்த காட்சி.
பொதுவாக, வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளே நம்பக் கூடியவையாக கருதப்படுகின்றன. காரணம், வாக்களித்து விட்டு வெளியேறுபவர்களிடம், யாருக்கு வாக்களித்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டு அதன்மூலம் சேகரிக்கப்படும் கணிப்புகள் இது என்பதால் பொதுவாக அவை சரியாக இருக்கும்.
ஆனால், வியாழக்கிழமை நடந்து முடிந்த தேர்தலைத் தொடர்ந்து இரவோடு இரவாக வெளிவந்த முடிவுகளின்படி தொழிலாளர் கட்சியே முதலில் முன்னணியில் இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
முதலில் 20 தொகுதிகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தது தொழிலாளர் கட்சி. ஆங்காங்கே வெற்றிக் கொண்டாட்டங்கள் தொடங்கியதோடு, தொழிலாளர் கட்சிதான் ஆட்சி அமைக்கப் போகின்றது என்ற தகவல் ஊடக ஆரூடங்களும் வெளியிடப்பட்டன.
கருத்துக் கணிப்புகள் பொய்யா என்ற விவாதம் சூடு பிடித்துக் கொண்டிருந்த வேளையில்தான் அந்த அதிசய பரபரப்பு நிகழ்ந்தது. அதிகாலையில் ஒரு கட்டத்தில் இரண்டு கட்சிகளும் சரிசமமாக ஆளுக்கு 180 தொகுதிகள் பெற்றிருந்தபோது, அனைவரும் நகத்தைக் கடித்துக்கொண்டு இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டனர்.
பிரிட்டிஷ் தேர்தலில் வாக்களித்து விட்டு மனைவியோடு வெளியேறும் லிபரல் கட்சித் தலைவர் நிக் கிளெக். கடந்த கூட்டணி ஆட்சியில் துணைப் பிரதமராக வலம் வந்த இவர், தற்போது கன்சர்வேடிவ் கட்சி தனிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றுள்ளதால், பதவியிழந்துள்ளார். லிபரல் கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியையும் துறந்துள்ளார்.
தொங்கு நாடாளுமன்றம்தான் என அடுத்தகட்ட ஆரூடங்களும் தொடங்கியது.
ஆனால், விடிந்த வெள்ளிக்கிழமை கன்சர்வேடிவ் கட்சிக்கும், பிரதமர் டேவிட் கெமரூனுக்கும் சாதகமான நாளாகவே விடிந்தது.
மெல்ல, மெல்ல, கன்சர்வேடிவ் கட்சி முன்னேறத் தொடங்க, தொழிலாளர் கட்சியோ பின்தங்கத் தொடங்கியது.
மொத்தமுள்ள 650 தொகுதிகளில் தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க 326 தொகுதிகள் தேவை என்ற நிலையில், தனியாக 330 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்திருக்கின்றது கன்சர்வேடிவ்.
2010 பொதுத் தேர்தலோடு ஓர் ஒப்பீடு
இந்தத் தேர்தல் முடிவுகளைப் பற்றி மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ள கொள்ள – கன்சர்வேடிவ் கட்சியின் இந்த தேர்தல் வெற்றி ஏன் அந்தக் கட்சி கொண்டாடி மகிழக் கூடிய ஒன்று என்பதை நாம் அறிந்து கொள்ள – கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரிட்டனின் பொதுத் தேர்தல் முடிவுகளையும் நாம் சுருக்கமாகக் கண்ணோட்டமிட வேண்டும். அப்போதுதான், எந்த அளவுக்கு இது கன்சர்வேடிவ் கட்சிக்கு மார்தட்டிப் பெருமை கொள்ளக் கூடிய அளவிற்கான வெற்றி என்பது நமக்குப் புலப்படும்.
தொழிலாளர் கட்சியின் தலைவர் எட் மிலிபண்ட் மனைவியோடு வாக்களிப்பு மையத்திலிருந்து வெளியேறுகின்றார். இந்த முறை தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் – பிரதமராகப் பதவியேற்பார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எட் மிலிபண்ட், தொழிலாளர் கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2010 பொதுத் தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் கன்சர்வேடிவ் கட்சி 306 தொகுதிகளில் வெற்றி பெற, தொழிலாளர் கட்சியோ 258 தொகுதிகளைக் கைப்பற்ற இரண்டு கட்சிகளுமே ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறின.
அப்போது – 2010க்கு முன்புவரை ஆட்சியில் இருந்தது தொழிலாளர் கட்சிதான்.
ஆனால் அந்த 2010 தேர்தலில் லிபரல் டெமோக்ரெடிக் (Liberal Democratic) கட்சி 57 தொகுதிகளில் வென்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்திருந்தது. கடந்த பல ஆண்டுகளாக லிபரல் கட்சி பிரிட்டிஷ் அரசியலில் பரிணமிக்க முடியாமல் தடுமாறி வந்தாலும் 1950-60ஆம் ஆண்டுகளில் அந்தக் கட்சி பிரிட்டனின் ஆளும் கட்சியாக இருந்திருக்கின்றது.
இந்நிலையில் 2010இல் தனிப் பெரும்பான்மை பெற முடியாமல் கன்சர்வேடிவ் கட்சி தடுமாறிய வேளையில், லிபரல் கட்சி அதற்கு கைகொடுக்க முன்வர கூட்டணி ஆட்சி அமைந்தது. கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் டேவிட் கெமரூன் பிரதமராகவும், லிபரல் கட்சியின் தலைவர் நிக் கிலெக் (Nick Clegg) துணைப் பிரதமராகவும் ஆட்சி பீடத்தில் அமர்ந்தனர்.
ஐந்து ஆண்டுகள் கழித்து நடைபெற்றதுதான் கடந்த மே 7 தேர்தல்!
லிபரல் இந்த முறை மோசமான தோல்வி
ஆனால், இந்த முறை லிபரல் கட்சி மோசமாகத் தோல்வி கண்டது. வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே அதனால் வெல்ல முடிந்தது.
தொழிலாளர் கட்சியோ 232 தொகுதிகளில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக மீண்டும் உருவெடுத்துள்ளது.
தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 325 நாடாளுமன்ற இடங்கள் தேவை என்ற நிலையில், கன்சர்வேடிவ் கட்சியோ மொத்தம் 330 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதனால் அதன் வெற்றி அந்தக் கட்சியினர் உற்சாகத்துடன் கொண்டாடக் கூடிய, ஒரு வெற்றியாகும்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூனின் நான்கு ஆண்டுகால ஆட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரமாகவும், அவரது தலைமைத்துவத்திற்கும் ஆற்றலுக்கும் கிடைத்த தனிப்பட்ட வெற்றியாகவும் கன்சர்வேடிவ் கட்சியின் வெற்றி பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில் தோல்வியடைந்த தொழிலாளர் கட்சியின் தலைவர் எட் மிலிபண்ட்டும், லிபரல் கட்சியின் தலைவர் நிக் கிளெக்கும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
பிரிட்டிஷ் அரசியலில் பாராட்டத்தக்க ஜனநாயகப் பாரம்பரியம் ஒன்று எப்போதும் பின்பற்றப்படுகின்றது. ஒரு தலைவர் ஒரு கட்சியை முன்னின்று பிரச்சாரம் செய்து பொதுத் தேர்தலில் வழிநடத்துவார். ஆனால், அந்தக் கட்சி மோசமாக தோல்வியடைந்துவிட்டால் அதற்குப் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலகுவார்.
கட்சியும் “உங்களை விட்டால் வேறு கதி எங்களுக்கு இல்லை” என அவரது காலைப் பிடித்து கெஞ்சாது. அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்பார். அந்த வகையில்தான் மோசமாகத் தோல்வியடைந்த தொழிலாளர் கட்சி மற்றும் லிபரல் கட்சியின் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
சரி! பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொழிலாளர் கட்சி மண்ணைக் கவ்வ என்ன காரணம்?
அந்தக் கட்சியைக் காலை வாரி விட்டது ஸ்காட்லாந்து நாட்டில், அதற்கு ஏற்பட்ட மாபெரும் பின்னடைவு. அது என்ன? ஏன் ஏற்பட்டது? என்பதை நாளைய கட்டுரையில் பார்ப்போம்.
-இரா.முத்தரசன்
(நாளை; பிரிட்டன் தேர்தல் பார்வை (2) – தொழிலாளர் கட்சியை காலை வாரிவிட்ட ஸ்காட்லாந்து மக்கள்)
Photos: EPA