சான்சல்வடார், ஜூன் 13- கொக்க கோலா போன்ற பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்களால் எல்சால்வடாரில் உள்ள ஒரு நகராட்சிப் பகுதி முழுவதும் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல்சால்வடாரில் நெஜபா என்ற நகராட்சி உள்ளது. இப்பகுதியில் 30000 மக்கள் வாழ்கிறார்கள். இங்கு சான் அண்டோனியா ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த ஆற்று நீரை நம்பித் தான் இப்பகுதி மக்கள் அனைவரும் வசிக்கிறார்கள். ஆனால்,அவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைக்கும் விதமாக,நீர்வளம் மிகுந்த இப்பகுதியைக் குறி வைத்து வந்து பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே தொழிற்சாலைகள் அமைத்தன.
ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டது.போதாதென்று ஆற்று நீரையும் குழாய்கள் மூலம் தொழிற்சாலைக்குக் கொண்டு சென்றனர்.
அதனால் தற்போது நகராட்சி முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது.
இதை எதிர்த்துப் போராடி வரும் ஒரு சமூக ஆர்வலர்,”நாடாளுமன்றத்தில் காத்திருக்கும் புதிய தண்ணீச் சட்டம் வந்தால்தான் மக்களுக்கு நல்வழி பிறக்கும்.ஆனால், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகப் புதிய சட்டத்தை வர விடாமல் தடுக்கிறார்கள் அரசியல்வாதிகள்” எனக் குமுறுகிறார்.
என்றைக்கு இந்தத் தண்ணீர்ப் பிரச்சனை தீர்ந்து அந்த மக்களின் கண்ணீரைத் துடைக்குமோ?