மசாலாக் கதைகளாக நடித்து வந்த விஜய் கடந்த சில ஆண்டுகளாகக் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் தனுஷ், பாபிசிம்கா உள்ளிட்ட இளம் நடிகர்கள் தேசிய விருதுகளைச் சர்வ சாதாரணமாகப் பெற்று வருவதால், விஜய்க்கும் விருதுகளை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதனை ஊடகங்களிலும் அவர் ஏற்கனவே வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சீனு ராமசாமி பற்றிய செய்திகள் வெளியானதால், ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் ஊடகங்களில் வெளியான செய்திகளுக்குச் சீனு ராமசாமி மறுப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஜய் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் உள்ளது. சரியான கதைக் களம் அமைந்தால் கண்டிப்பாக விஜய்யை இயக்குவேன். ஆனால் தற்சமயம் அது சாத்தியமில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அடுத்ததாக ‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் காவல் துறை அதிகாரியாக நடிக்கும் விஜய், அதற்குப் பின் நடிகர்-இயக்குனர் சசிக்குமார் இயக்கத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.