கோலாலம்பூர், ஜூன் 19 – அண்மையில் நடைபெற்ற 2009 மத்திய செயலவைக் கூட்டம் கட்சியின் சட்டவிதிமுறைகளின் படி முறையானது தான் என்றும், அதில் பங்குபெற்றவர்களை இடைநீக்கம் செய்யும் அளவிற்கு அதில் எந்த ஒரு விதிமுறை மீறல்களும் இல்லை என்றும் முன்னாள் மஇகா பொதுச்செயலாளர் டான்ஸ்ரீ ஜி.வடிவேலு தெரிவித்துள்ளார்.
சட்டவிதிமுறை 56.2-ன் அடிப்படையில், கட்சியின் பொதுச்செயலாளர், தலைவரின் உத்தரவுப் படியோ, அல்லது மூன்றில் ஒரு பங்கு மத்தியச் செயலவை உறுப்பினர்களின் வேண்டுகோளின் படியோ மத்திய செயலவைக் கூட்டத்தைக் கூட்ட இயலும் என்றும் வடிவேலு மேற்கோள் காட்டியுள்ளார்.
“இந்த விவகாரத்தில், மஇகா பொதுச்செயலாளர் ஏ.சக்திவேல் மூன்றில் ஒரு பங்கு மத்திய செயலவை உறுப்பினர்களின் வேண்டுகோளின் படி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். எனவே அந்தக் கூட்டம் முறையானது தான்” என்றும் வடிவேலு குறிப்பிட்டுள்ளார்.
மஇகா தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில், 17 மத்திய செயலவை உறுப்பினர்களின் பங்கேற்பில் அக்கூட்டம் நடைபெற்றதாகவும், மஇகா-வில் பல்வேறு சட்டதிருத்தங்களில் பங்கேற்றவரான வடிவேலு தெரிவித்துள்ளார்.
மேலும், மத்தியச் செயலவையிடம் கலந்தாலோசிக்காமல், யாரையும் இடைநீக்கம் செய்ய கட்சியின் தலைவருக்கு அதிகாரம் கிடையாது என்றும், தலைவர் என்பவர் சட்டப்பிரிவு 60.4-ன் படி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வடிவேலு தெரிவித்துள்ளார்.
கட்சியின் சட்டவிதிகளின் படி, மத்திய செயலவையிடம் கலந்தாலோசிக்காமல் கட்சி விவகாரங்களை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்பவர்கள் தானாகவே உறுப்பினர் தகுதியை இழந்துவிடுவார்கள் என்ற கூற்றை வடிவேலும் ஒப்புக்கொள்கிறார்.
அதன்படி, சட்டப்பிரிவு 91-ன் கீழ் பழனிவேல் தனது மஇகா தேசியத் தலைவர் பதவியை இழந்துவிட்டதாகச் சுப்ரா கூறுவதை வடிவேலு ஏற்றுக்கொண்டுள்ளார்.
என்றாலும், வழக்கறிஞர் ஆர்.டி. ராஜேந்திரன், பழனிவேல் இன்னும் மஇகா தலைவர் தான் என்று வலியுறுத்தி வருகின்றார்.
சட்டப்பிரிவு 91, மத்திய செயலவை முடிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ராஜேந்திரன் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.