வாஷிங்டன், ஜூன் 19 – அமெரிக்காவில் தேவாலயம் ஒன்றில் நடந்த இனவெறித்ய் தாக்குதலில், 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆப்பிரிக்க அமெரிக்கரான ஒபாமாவை அதிபராகக் கொண்டுள்ள அமெரிக்காவில், சமீப காலமாக வெள்ளை இனத்தவர்களால் கருப்பு இனத்தவர் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி வருவது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தெற்குக் கரோலினா மாகாணத்தில் சார்லஸ்டன் நகரில் அமைந்துள்ள இமானுவேல் ஆப்பிரிக்க மெத்தோடிஸ்ட் எபிஸ்கோபல் தேவாலயத்தில், நேற்று முன்தினம் இரவு இனவெறித் தாக்குதல் நடந்திருப்பது, உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
200 ஆண்டுகள் பழமையான இந்தத் தேவாலயத்தில் வாரம் தோறும் புதன்கிழமைகளில் வழிபாட்டுடன் கூடிய பைபிள் வகுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வழக்கப்படி நேற்று முன்தினம் மாலையும் பைபிள் வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அப்போது, இரவு 9 மணிக்கு வெள்ளை இன வாலிபர் ஒருவர் அந்தத் தேவாலயத்திற்குள் நுழைந்து கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அலறினர். துடித்தனர்.
இந்தத் தாக்குதலை நடத்திய அந்த வெள்ளை இன வாலிபர், அடுத்த சில வினாடிகளிலேயே அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டார். அவர், சாம்பல் நிற சட்டையும், நீல நிற ஜீன்சும் அணிந்திருந்தார். இந்தத் தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்தனர்.
அதற்குள் துப்பாக்கி குண்டு பாய்ந்தவர்களில் 8 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக அவசர ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதனால், இந்தச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்தது. இது தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய கொலையாளியைத் தேடி வருகின்றனர். அவரைப் போன்ற அடையாளம் உள்ள ஒருவரைப் பிடித்து விசாரித்து விட்டு, அனுப்பி விட்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.