கொழும்பு, ஜூன் 19 – இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை, பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியாது என அந்நாட்டின் ஆளும் சிறிசேனா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
இத்தகவலை இலங்கை சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான ரஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஆளும்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பாகவும் ராஜபக்சேவுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும்படி ஏற்கனவே ராஜபக்சே கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆராய ஆறு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
அந்தக் குழு, தனது முதலாவது கூட்டத்தை, செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பில் நடத்தியிருந்தது. மகிந்த ராஜபக்சேவைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் திட்டம் எதையும் முன்வைக்கக் கூடாது என்று தமக்கு வழங்கப்பட்ட செய்தி தொடர்பாக அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப் போவதில்லை என்ற தனது முடிவை, மகிந்த ராஜபக்சேவுக்குக் குடும்ப உறுப்பினர் ஒருவர் மூலம் மைத்திரிபால சிறிசேனா தெரியப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஆளும் கட்சியின் 6 பேர் கொண்ட உயர்மட்டக் குழு, அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுடன் ஆலோசனை நடத்தியதாகவும், இதில், ராஜபக்சேவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் அமைச்சர் ரஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.