டிபிலிஸி, ஜூன் 19 – ஜார்ஜியா நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது தலைநகர் டிபிலிஸியில் உள்ள மிருகக்காட்சி சாலையில் இருந்து தப்பிய வெள்ளைப் புலி ஒன்று அந்நகர வாசி ஒருவரைக் கடித்துக் கொன்றது. அந்தப் புலி மனிதர்களைத் தாக்கத் தொடங்கியதால் காவல் துறையினர் வேறு வழியின்றி அதனைச் சுட்டுக் கொன்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜார்ஜியாவில், கடந்த சில நாட்களாகத் தொடர்மழை பெய்து வருகின்றது. மழையின் காரணமாக அங்கு கடுமையான வெள்ளப் போக்கு ஏற்பட்டு ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இந்தக் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இதுவரை 17 பேர் பலியாகி உள்ள நிலையில் டிபிலிஸி மிருகக்காட்சி சாலையில் இருந்து வன விலங்குகள் தப்பிச் சென்றுவிட்டன.
அவற்றைப் பிடிக்கும் வரை மக்கள் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வெள்ளைப் புலி ஒன்று அந்நகர வாசியை நேற்று அடித்துக் கொன்றது. ஆரம்பத்தில் அந்நாட்டு அமைச்சகம் சிங்கம் கொன்றதாக அறிவித்தது. எனினும், காவல்துறையினர் மனிதரைக் கொன்ற புலியை நேற்று சுட்டுக் கொன்றனர்.
இதுபற்றி அந்நாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நகரவாசியைக் கொன்ற புலியைக் காவல்துறையினர் வேட்டையாடி உள்ளனர். எனினும், அந்தப் புலியுடன் சுற்றித் திரியும் மற்றொரு புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தப் புலியாலும் மக்களுக்கு ஆபத்து நேர வாய்ப்புள்ளதால் அதனை விரைந்து பிடிக்க முயற்சிகளை எடுத்து வருகின்றோம்” என்று அறிவித்துள்ளது.