டிபிலிஸி, ஜூன் 15 – ஜார்ஜியா நாட்டில் கடந்த சில நாட்களாகக் கன மழை பெய்து வரும் நிலையில், தலைநகர் டிபிலிஸியில் உள்ள மிருகக்காட்சி சாலையில் ஏற்பட்ட வெள்ள அரிப்பினால், அங்கிருந்து தப்பித்த சிங்கம், புலி உள்ளிட்ட வன விலங்குகள் வீடுகளுக்குள் புகுந்துள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் பதற்றம் அடைந்துள்ளனர்.
ஐரோப்பாவின் உறுப்பு நாடுகளில் ஒன்றான ஜார்ஜியாவில், கடந்த சில நாட்களாகத் தொடர்மழை பெய்து வருகின்றது. மழையின் காரணமாக அங்குக் கடுமையான வெள்ளப் போக்கும் ஏற்பட்டு ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை அங்கு 8 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், டிபிலிஸியில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் புகுந்த வெள்ள நீர் அங்கிருந்த தடுப்பு வேலிகளை அறுத்தெறிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காப்பகத்தில் இருந்த சிங்கம், புலி, கரடி, நீர்யானை, காண்டா மிருகம், முதலை போன்ற ஆபத்தான வன உயிரினங்கள் அங்கிருந்து தப்பி மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் புகுந்துவிட்டன.
தகவல் அறிந்து விரைவாகச் செயல்பட்ட காப்பக ஊழியர்கள் மயக்க ஊசி போட்டு, சில கரடிகளையும், நீர் யானைகளையும் பிடித்துள்ளனர். எனினும், சிங்கம், புலி போன்ற பயங்கர விலங்குகளை இதுவரை பிடிக்க முடியவில்லை. அதனால் மக்கள் இந்த விலங்குகளைப் பிடிக்கும் வரை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.