லண்டன், ஜூன் 15 – இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் மூலம் பிரபலமான லலித்மோடி, அதே வகைக் கிரிக்கெட் போட்டிகளில் பல்லாயிரம் கோடி முறைகேடுகளிலும் சிக்கி இந்தியாவில் இருந்து தலைமறைவாகி விட்டார். லண்டனில் அவர் வசிப்பதாகக் கூறப்படும் நிலையில், அங்கு அவரது குடியேற்றம் தொடர்பாக அந்நாட்டு அரசிற்கு இந்திய மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அழுத்தம் கொடுத்ததாக சமீபத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் ஊழல் வாதிக்கு, சுஷ்மா ஏன் உதவி செய்ய வேண்டும். இதற்குச் சரியான விளக்கங்களைக் கொடுக்கவில்லை எனில் அவர் தனது அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தலைவராகக் கடந்த 2008 முதல் 2010 வரை செயல்பட்டு வந்த லலித்மோடி. ஊழல் புகாரில் சிக்கித் தலைவர் பதவியை இழந்தார். மேலும், இந்த ஊழல் புகாரில் இவர் மீதும் குற்றம் நிரூபணமும் ஆனது. இதையடுத்து, இவருக்குப் பி.சி.சி.ஐ, வாழ்நாள் தடை விதித்தது. மேலும் இந்தப் புகாரின் அடிப்படையில் இவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் இருந்தன. தனது செல்வாக்கு மூலம் இவற்றை முன்கூட்டியே அறிந்த கொண்ட லலித் மோடி, கடந்த சில ஆண்டுகளாக லண்டனில் தலைமறைவாகி இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு அவர் லண்டனில் குடியேற, குடியேற்ற அனுமதி தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிரிட்டிஷ் குடியேற்ற அதிகாரிகளிடம் அழுத்தம் கொடுத்தார் எனப் பிரிட்டிஷ் பத்திரிக்கை ஒன்று சமீபத்தில் செய்தி வெளியிட்டது. இந்த விவகாரம் தொடர்பாகத் தான் எதிர்க்கட்சிகள் தற்போது கேள்வி ஈழுப்பி உள்ளன.
இந்நிலையில் தனக்கு சுஷ்மா உதவி செய்ததை ஒப்புக் கொண்டுள்ள லலித் மோடி, “புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள எனது மனைவியைக் காப்பாற்றவே சுஷ்மா பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் குடியேற்றச் சான்று தொடர்பாக அழுத்தம் கொடுத்தார். அவர் இதனை மனிதாபிமானத்தின் அடிப்படையில் தான் செய்துள்ளார். எதிர்க்கட்சிகள் இதனை வேண்டுமென்றே அரசியலாக்குகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தனது செயல் தொடர்பாகச் சுஷ்மா சுவராஜ் இந்தியப் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசியுள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.