கோலாலம்பூர், ஜூன் 15 – டுவிட்டர் குறுஞ்செய்திகளை 140 எழுத்துக்களுள் தான் அனுப்ப வேண்டும் என்ற வரம்பை அந்நிறுவனம் தளர்த்த உள்ளது. இனி ஒவ்வொரு குறுஞ்செய்திகளிலும் 10,000 எழுத்துக்கள் வரை பயன்படுத்தலாம்.
‘பேஸ்புக்’ (Facebook), ‘லிங்க்டுஇன்’ (LinkedIn) உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வார்த்தைகளுக்கோ அல்லது குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கோ எந்தவொரு எழுத்துக்கள் வரம்பும் இல்லை. ஆனால் டுவிட்டரில், டுவிட் செய்தாலும், குறுஞ்செய்தி அனுப்பினாலும் 140 எழுத்துக்களுக்குள் தான் அனுப்ப வேண்டும். டுவிட்டுகளுக்குப் பயனர்கள் இதனை ஏற்றுக் கொண்டாலும், குறுஞ்செய்திகளுக்கும் இந்த நிபந்தனை சற்றே தொய்வை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டுவிட்டர் நிறுவனம் வரும் ஜூலை மாதம் முதல் அத்தகைய வரம்புகளைத் தளர்த்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டருக்கான வடிவமைப்பாளர் சச்சின் அகர்வால், டுவிட்டர் மேம்பாட்டாளர்களிடம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. எனினும், டுவிட்டர் நிறுவனம் இது பற்றி இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.
இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் குறுஞ்செய்தி அனுப்புதலில் மட்டும் தான் 140 எழுத்துக்கள் என்ற வரம்புகள் நீக்கப்பட உள்ளன. டுவிட்டுகளில் எத்தகைய மாற்றமும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.