Home வணிகம்/தொழில் நுட்பம் ஜிம்பாப்வேயின் 35 குவாட்ரில்லியன் டாலர்கள், ஒரு அமெரிக்க டாலருக்குச் சமமான பரிதாபம்!

ஜிம்பாப்வேயின் 35 குவாட்ரில்லியன் டாலர்கள், ஒரு அமெரிக்க டாலருக்குச் சமமான பரிதாபம்!

910
0
SHARE
Ad

??????????????????ஹராரே, ஜூன் 15 – ஒரு நாட்டு மக்கள் மூட்டை மூட்டையாகப் பணத்தை எடுத்துக் கொண்டு போய், தெருவோரக் கடைகளில் ஒருவேளைக்கான பாலும், ரொட்டித் துண்டுகளும் வாங்கினால் அந்நாட்டின் பண மதிப்பு எத்தகைய நிலையில் உள்ளது என்பதை அனைவராலும் யூகிக்க முடியும். அத்தகைய நிலையில் தான் தற்போது ஜிம்பாப்வே உள்ளது.

ஜிம்பாப்வே பண வீழ்ச்சியைக் குறிக்கப் பெரும் பண வீக்கத்தைக் குறிக்கும் ‘ஹைப்பர்இன்ஃப்ளேஷன்’ (Hyperinflation) என்ற ஆங்கில வார்த்தையே போதவில்லை. கடந்த 2008-ம் ஆண்டு முதல் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் அந்நாட்டின் பண மதிப்பு 25 மணி நேரத்திற்கு ஒரு முறை பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாகக் கடுமையான விலை வாசியைச் சந்தித்துள்ள மக்கள் வறுமையின் விளிம்பைத் தாண்டி உள்ளனர். விலை வாசி மட்டும் நாள் ஒன்றிற்கு இரு முறை உயர்கிறது.

இதற்கிடையே அந்நாட்டு அரசு, சுமார் 100 டிரில்லியன் ஜிம்பாப்வே டாலர்களை அச்சடித்தும் பலன் இல்லாமல் போனது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வே டாலரை முற்றிலும் அழித்துவிடும் முடிவிற்கு அந்நாட்டு அரசு வந்துவிட்டது. இதனை பொது ஊடகங்களில் அந்நாட்டு அதிபர் ராபர்ட் முகாபேவே அறிவித்துவிட்டார். அதனைத் தொடர்ந்து மக்கள் தங்களிடம் இருக்கும் ஜிம்பாப்வே டாலரை மத்திய வங்கிகளில் கொடுத்து அமெரிக்க டாலர்களாகப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

அப்படி வெளியான அறிவிப்புகளைத் தொடர்ந்து மக்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை அந்நாட்டு  மத்திய வங்கி உள்ளிட்ட வங்கிகளில் மாற்றி வருகின்றனர். அந்நாட்டு பண மதிப்பை ஒப்பிடுகையில் அமெரிக்க டாலர் மதிப்பு மிகுந்த உச்சத்தில் இருக்கிறது. அங்கு ஒரு அமெரிக்க டாலரை மக்கள் பெற வேண்டுமானால் 35 குவாட்ரில்லியன் (35,000,000,000,000,000) ஜிம்பாப்வே டாலர்களைக் கொடுக்க வேண்டும்.

ஜிம்பாப்வேயின் இந்தப் பண வீழ்ச்சிக்குத் தவறான நிர்வாகக் கொள்கைகள் காரணமாக இருந்தாலும், கடந்த காலக் காலனி ஆதிக்கத்தால் அந்நாட்டில் ஏற்பட்ட கருப்பு வெள்ளை இன மக்களின் வேறுபாடும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதனைப் போக்க நினைத்த அந்நாட்டு அதிபர் முகாபே, வெள்ளை நிறத்தவர்களிடம் இருந்த அதிகப்படியான பண்ணைகளைக் கறுப்பினத்தவர்களிடம் கொடுத்தார். ஆனால் அதனைச் சரியாக நிர்வகிக்க அவர்களுக்குத் தெரியாததால், ஜிம்பாப்வே பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.