வாஷிங்டன் : உலகின் முதல் நிலை பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடகத் தளத்தை வாங்குவதில் வெற்றி பெற்றுள்ளார். 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்த நிறுவனத்தை அவர் கையகப்படுத்துகிறார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வணிகப் பரிமாற்றம் முழுமையடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பங்குச் சந்தையில் இடம் பெற்றிருக்கும் டுவிட்டர், அதிலிருந்து அகற்றப்பட்டு, எலன் மஸ்க்கின் கீழ் தனியார் நிறுவனமாக இனி செயல்படத் தொடங்கும்.
எலென் மஸ்க் கடந்த ஒரு மாதகாலமாக டுவிட்டர் பங்குகளைத் தொடர்ந்து வாங்கி வந்தார். ஒரு கட்டத்தில் அவர் அதன் 10 விழுக்காட்டுப் பங்குகளைக் கைப்பற்றியிருக்கிறார் என அறிவிக்கப்பட்டது.
எலென் மஸ்க் டுவிட்டர் இயக்குநர் வாரியத்தில் உறுப்பினராக இணைந்து கொள்ளவும் டுவிட்டர் நிர்வாகம் அழைப்பு விடுத்தது. ஆனால் அவர் அதை நிராகரித்தார்.
கடந்த ஒரு மாத காலகட்டத்தில் டுவிட்டரை முழுமையாக வாங்கிக் கொள்ளும் செயல் திட்டத்தை அவர் செயல்படுத்தியுள்ளார்.
டுவிட்டர் பங்குதாரர்கள் தங்களின் பங்குகளை 54.20 அமெரிக்க டாலர் விலைக்கு எலென் மஸ்க்கிடம் விற்க வேண்டும். நடப்பு சந்தை விலையை விட 38 விழுக்காடு கூடுதல் தொகையை எலென் மஸ்க் வழங்குவதால் டுவிட்டர் பங்குதாரர்கள் அவரிடம் பங்குகளை விற்க டுவிட்டர் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.