புதுடெல்லி, ஜூன் 19 – தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி மாதம் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்றது.
பிப்ரவரி 15-ஆம் தேதி அடிலெய்டி மைதானத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற போட்டியை அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் நேரடியாகக் கண்டு ரசித்தனர்.
அப்போது அவர்கள் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்க தங்கள் கைகளில் வைத்திருந்த பெரிய அளவிலான இந்திய தேசியக் கொடியைச் சில சந்தர்ப்பங்களில் போர்வையாக உடல் மீது போர்த்தியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த சேத்தன் திமான் என்பவர் உள்ளூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சேத்தனின் வழக்கறிஞர் சஞ்சீவ் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில்; “அமிதாப் பச்சனும், அபிஷேக் பச்சனும் தேசியக் கொடியை அவமதித்துள்ளனர். இதற்கான காணொளி ஆதாரங்கள் உள்ளன”.
“மேலும், இவர்களின் இந்த நடவடிக்கையால் இந்தியாவின் புகழுக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது என்றும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.