Home 13வது பொதுத் தேர்தல் மக்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் இந்தியர்கள் விடுபடவில்லை – அன்வார்

மக்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் இந்தியர்கள் விடுபடவில்லை – அன்வார்

594
0
SHARE
Ad

Anwar-feature--3

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 7 – மக்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் இந்தியர்களுக்கான சலுகைகள் விடுபட்டு இருப்பது குறித்து எழுந்த கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு தற்போது இந்திய சமுதாயத்தில் முக்கிய பொறுப்புகள் வகிப்பவர்களிடம் அன்வார் கலந்தாலோசித்து வருகிறார்.

கடந்த வாரம் தொடங்கி இந்திய சமுதாயத்தினரிடையே பலகட்ட விவாதங்களை மேற்கொண்டு வரும் அன்வார், அவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, மக்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில்  இருந்து இந்தியர்கள் விடுபடவில்லை என்பதையும் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் பிரச்சனைகளுக்குத் தீர்வு

மேலும் மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள், மலேசியாவில் வாழ்வாதாரங்கள் இன்றி தவிக்கும் அனைத்து மக்களின் (இந்தியர்களோடு சேர்த்து) பிரச்சனைகளுக்கும் தீர்வுகாணப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

ஏழ்மையான குடும்பத்திலிருந்து வருபவர்களுக்கு தொழிற் கல்வியோடு சேர்த்து வேலை வாய்ப்புக்களும் கிடைக்கும் வகையில் பல திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும், இந்த திட்டங்களில் இந்திய சமுதாயத்தினர் பெரும்பான்மையான  பயனை அடைவார்கள் என்றும், இதன் மூலம், அவர்கள் வறுமைப் பிடியிலிருந்து விலகி, சமுதாயத்தில் ஒரு உயர்ந்த நிலையில் தங்களை வைத்துக்கொள்ள இத்திட்டங்கள் உதவுமென்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், அனைத்து தமிழ் பள்ளிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு,அவற்றின் கல்வித்தரம் தேசிய அளவோடு ஒப்பிடும் வகையில் உயர்த்தப்படும் என்றும், அதுமட்டுமின்றி நாடெங்கிலும் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளியவர்கள் அனைவரும் பயனடையும் வகையில் தேசிய வீட்டு வசதி வாரியத்தின் மூலம் மலிவு விலை வீடுகள் கட்டப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.

மக்களின் தேவைக்கேற்ற திட்டங்கள்

தேசிய முன்னணி அரசின் திட்டங்கள் குறித்து விமர்சித்த அன்வார், தேசிய முன்னணி அரசின் பல திட்டங்கள்  மக்களிடையே போதிய வரவேற்பையும், ஒத்துழைப்பையும் பெறாமல் தோல்வியடையக் காரணம் அவை இனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதேயாகும். இதை உணர்ந்து தான், மக்களின் தேவைகளுக்கேற்ப தாங்கள் உருவாக்கிய பல திட்டங்கள் வெற்றியடைந்திருக்கின்றன  என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில், தேவையான மாற்றங்களை தாம் செய்து வருவதாகவும், அவை காலத்திற்கும், இனப் பாகுபாடின்றி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நிலைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கை தவறான புள்ளிவிவரங்களையும், காலாவதியான திட்டங்களையும் கொண்டிருப்பதாக எழுந்த தேசிய முன்னணியின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த அன்வார்,தங்கள் திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற 4.5 பில்லியன் ரிங்கிட் தேவைப்படும் என்ற வெளிப்படையான கணக்கை மக்கள் கூட்டணி அரசு ஏற்கனவே அறிவித்திருப்பதாகவும் தெரிவித்தார்.