புதுடெல்லி, ஜூன்24- அடிக்கடி நிகழும் சாலை விபத்துக்களைத் தவிர்க்கவும்,போக்குவரத்து விதிமுறை மீறல்களைத் தடுக்கவும், போக்குவரத்துச் சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாகப் புதிய சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதாவைத் தயாரித்துள்ளது.
இந்தப் புதிய சட்டப்படி, இனி, குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
தற்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுபவருக்கு ரூ.2,000 அபராதம் மற்றும் 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. புதிய சட்டப்படி அபராதத் தொகை 5 மடங்கு அதிகரிக்கப்படுகிறது.
இதேபோல் ஆயுள் காப்பீடு(இன்சூரன்ஸ்) செய்யப்படாத வாகனங்களுக்கான அபராதத் தொகையும் பல மடங்கு அதிகரிக்கப்படும். அதன்படி ஒவ்வொரு வாகனத்துக்கு ஏற்ப ரூ.2,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்தியா முழுவதும் 70 சதவீத இருசக்கர வாகனங்கள் ஆயுள் காப்பீடு (இன்சூரன்ஸ்) இல்லாமலும், புதுப்பிக்கப்படாமலும் சாலையில் ஓடுவது கண்டறியப்பட்டுள்ளது. அபராதத் தொகையை அதிகப்படுத் துவதன் மூலம் வாகன ஓட் டிகள் முறைப்படி ஆயுள் காப்பீடு எடுக்க முன்வருவார்கள் என அரசு எதிர்பார்க்கிறது.
இந்தப் புதிய மசோதா மத்தியச் சட்ட அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து மாநில அரசுகளுக்கும் புதிய விதிமுறைகள் பற்றிக் கருத்துத் தெரிவிக்குமாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை நிறைவேற்றி அமலுக்குக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.